பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம் இடையேயான கூட்டணி பொருந்தாத திருமணம்.. லாலு கட்சி விமர்சனம்

 
ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க.

பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம் இடையேயான கூட்டணி பொருந்தாத திருமணம் என்று லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் விமர்சனம் செய்துள்ளது.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கூட்டணியாக ஆட்சி அமைத்துள்ளபோதிலும், இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையே ஆரம்பம் முதலே பல்வேறு விஷயங்களில் முரண்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று நடைபெற்ற குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில், முதல்வர் நிதிஷ் குமாரோ அல்லது ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த எந்தவொரு முக்கிய தலைவரோ கலந்து கொள்ளவில்லை. இதனால் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் விரிசல் பெரிதாகி உள்ளதாக பேசப்படுகிறது. இந்நிலையில், பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம் இடையேயான கூட்டணி பொருந்தாத திருமணம் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் விமர்சனம் செய்துள்ளது.

நிதிஷ் குமார்

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் பீகார் தலைவர் ஜெகதானந்த் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம் இடையேயான கூட்டணி பொருந்தாத திருமணம் என்று நான் பலமுறை கூறியுள்ளேன். இந்த இரு கட்சிகளுக்கும் இடையே எந்த பொருத்தமும் இல்லை. இது அவர்களுக்கு இடையேயான சந்தர்ப்பவாத கூட்டணி என்று நான் உறுதியாக நம்புகிறேன். எல்லாக் கொள்கைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு பா.ஜ.க.வுடன் நிதிஷ் குமார் ஆட்சி அமைத்தால், அவர் சோசலிச விழுமியங்களிலிருந்து தன்னை பிரித்து கொண்டார் என்று நான் நம்புகிறேன். 

ஜெகதானந்த் சிங்

குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவுக்கு நிதிஷ் குமார் ஏன் செல்லவில்லை என்று பதில் அளிப்பதற்கு சிறந்த நபர் அவராகத்தான் இருக்கும். வறட்சி நிலையை எதிர்கொண்டுள்ள பீகாரில் உள்ள 12 கோடி மக்கள் மீது நிதிஷ் குமார் அதிக அக்கறை கொண்டுள்ளார் என்று நாம் நம்புகிறேன். தற்போது பீகாரில் வறட்சி நிலை 1967ஐ விட 20 மடங்கு மோசமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.