ராகுலின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு எதிராக மக்கள் கோபம் யாத்திரை தொடங்கும் ராஜஸ்தான் பா.ஜ.க.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு எதிராக ராஜஸ்தான் பா.ஜ.க. அம்மாநிலத்தில் மக்கள் கோபம் யாத்திரையை டிசம்பர் 2ம் தேதி முதல் தொடங்குகிறது.
ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தற்போது மத்திய பிரதேசத்தில் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய பிரதேசத்தில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நிறைவடைந்தபிறகு டிசம்பர் 3 அல்லது 4ம் தேதி ராஜஸ்தானில் நுழைகிறது. இந்நிலையில் ராகுலின் இந்திய ஒற்றுமை பயணத்துக்கு பதிலடியாக ராஜஸ்தான் பா.ஜ.க. அம்மாநிலத்தில் மக்கள் கோபம் யாத்திரையை டிசம்பர் 2ம் தேதி முதல் தொடங்குகிறது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 200 தொகுதிகளிலும் மக்கள் கோபம் யாத்திரை பா.ஜ.க. மேற்கொள்ள உள்ளது. இந்த யாத்திரை ஏற்பாடுகளுக்கான பயிலரங்கில் அம்மாநில பா.ஜ.க. தலைவர் சதீஷ் பூனியா தொண்டர்கள் மத்தியில் பேசுகையில் கூறியதாவது: ராஜஸ்தானில் ஒரு நாய் ஒரு குழந்தையின் கருவை மருத்துவமனையில் சுமந்து கொண்டு இருக்கும் என்று யாரும் கற்பனை செய்யவில்லை.
35 ஆயிரம் ரூபாய்க்காக, ஒரு குடும்பம் தற்கொலை செய்து கொண்டது. மாநிலத்தில் பெண்கள் தினமும் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். ஒரு பெண்ணை 35 துண்டுகளாக்கி கொலை செய்வதை சாதாரணமானது என்று யாரும் கற்பனை செய்து பார்க்கவில்லை. வேலையின்மை பட்டியலில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. 70 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். ஒரு லட்சம் பேருக்கு வேலை கொடுத்ததாக முதல்வர் கூறுகிறார். ஆனால் மீதமுள்ள 69 லட்சம் பேரின் நிலை என்ன?. ஒவ்வொரு 12 கிலோ மீட்டருக்கும் ஒரு ஊழல் அதிகாரி சிக்குகிறார். ராஜஸ்தான் குற்றங்களின் தலைநகராக மாறி விட்டது. ஜின்னாவுடன் சேர்ந்து இந்தியாவும் பிரிக்கப்பட வேண்டும் என்பது நேருவின் விருப்பம்.
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய காங்கிரஸ் தலைமையிலான அரசை நான் கோருகிறேன். 60 லட்சம் விவசாயிகள் இன்னும் கடன் தள்ளுபடிக்காக காத்திருக்கிறார்கள். தேசத்தை ஒருங்கிணைத்தவர் பிரதமர் மோடி. ரயில் போக்குவரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி ரூ.56 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஜங்கிள் ராஜ், எதேச்சதிகார ஆட்சி அணுகுமுறையில் காங்கிரஸ் அரசாங்கத்தை பா.ஜ.க. எதிர்கொள்ளும். சாமானியர்கள் நீதியை நாடுகின்றனர், ராஜஸ்தான் அரசு எதுவும் செய்யாததால் அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். சாமானியர்கள், பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், விவசாயிகள் மற்றும் வேலையில்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் மக்களின் கண்ணீருக்கு கெலாட் அரசாங்கம் பொறுப்பு. அரசாங்கத்தின் உள்ளே இருப்பதை விட சாலைகளில் அதிக பள்ளங்கள் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.