மோடி திரிபுராவில் கூட்டங்களில் கலந்து கொண்ட போது அல்லது தேர்தல் நடக்கும்போது கோவிட் எங்கே இருந்தது?.. காங்கிரஸ்

 
பி.கச்சாரியாவாஸ்

பிரதமர் மோடி திரிபுராவில் கூட்டங்களில் கலந்து கொண்ட போது அல்லது தேர்தல் நடக்கும்போது கோவிட் எங்கே இருந்தது? என்று ராஜஸ்தான் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த சில தினங்களுக்கு முன் ராகுல் காந்திக்கு எழுதிய கடிதத்தில், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடியுங்கள் அல்லது நடைப்பயணத்தை தற்காலிகமாக ஒத்திவையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் ஒருவர், பிரதமர் மோடி திரிபுராவில் கூட்டங்களில் கலந்து கொண்ட போது அல்லது தேர்தல் நடக்கும்போது கோவிட் எங்கே இருந்தது? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை  மத்திய அரசிடம் கேட்டுள்ளார்.

நடைபயணத்தின்போது ராகுல் காந்தி
ராஜஸ்தான் அமைச்சர் பி.கச்சாரியாவாஸ் கூறியதாவது: ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இந்த நடைப்பயணத்தில் இணைகின்றனர். பா.ஜ.க.வின் மக்கள் கோபம் யாத்திரை தோல்வியடைந்தது இருப்பினும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். உங்களுக்கு வயிறு வலி இருக்கிறது. கோவிட் எங்கே?. நம்மால் பார்க்க முடியாது. இப்போது வரை கோவிட் வரவில்லை. 

மோடி

மக்கள் கோபம் யாத்திரையை பா.ஜ.க. மேற்கொள்ளும்போது கோவிட் எங்கே இருந்தது?. பிரதமர் மோடி திரிபுராவில் கூட்டங்களில் கலந்து கொண்ட போது அல்லது தேர்தல் நடக்கும்போது கோவிட் எங்கே இருந்தது?. இவ்வாறு அவர் தெரிவித்தார். ராகுல் காந்தி நேற்று முன்தினம் பேசுகையில், ஆளும் கட்சி (பா.ஜ.க.) இந்தியாவின் பிற பகுதிகளில் எத்தனை பொதுக் கூட்டங்களை வேண்டுமானாலும் நடத்தலாம் ஆனால் எனது இந்திய ஒற்றுமை நடைப்பயணம் செல்லும் இடத்தில்தான் கோவிட் பார்க்கப்படுகிறது என மத்திய அரசை குற்றம் சாட்டியிருந்தார்.