ரஜினியின் படிக்காதவன் படத்தில் வருவது மாதிரி...உதயநிதிக்கு அண்ணாமலை பதிலடி
உதயநிதியின் கார் கமலாலயம் வருவதற்கு தகுதி இல்லை. அப்படியே அவர் வர முயற்சித்தாலும் ரஜினியின் படிக்காதவன் படத்தில் வருவது மாதிரியே கார் ஸ்டார்ட் ஆகாது என்று கடுமையாக சாடினார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
என் காரை வேண்டுமானால் எடப்பாடி பழனிச்சாமி எடுத்துக் கொண்டு போகட்டும். ஆனால் கமலாலயம் போய்விட வேண்டாம் என்று உதயநிதி பேசியதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் அண்ணாமலை.
சேப்பாக்கம் -திருவல்லிக்கேணியின் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி -பதில் நேரத்தின்போது பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் நன்றி. கடந்த முறை நான் பேசும்போது வெளிநடப்பு செய்து விட்டீர்கள். இப்போது பேசும் போது அவையில் இருப்பதற்கு நன்றி என்று சொன்னவர் தொடர்ந்து பேசிய போது , அப்படி வெளிநடப்புச் செய்து சென்றாலும் கூட என்னுடைய காரில்தான் தவறுதலாக ஏறுகிறீர்கள். அடுத்தமுறை தாராளமாக என் காரை எடுத்துச் செல்லலாம். ஆனால், கமலாலயம் சென்றுவிட வேண்டாம் என்று சொன்னதும் அவையில் சிரிப்பலை எழுந்தது .
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம், எங்கள் கார் எப்போதும் எம்ஜிஆர் மாளிகை நோக்கியே செல்லும் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் காரும், சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் காரும் ஒரேமாதிரியாக உள்ளன. இருவரின் கார்களும் சட்டமன்ற நுழைவு வாயிலில் 4 பகுதியில் நிறுத்தப்படுவது வழக்கம். இரண்டு கார்களும் ஒரே மாதிரியாக இருப்பதால் கடந்த வாரம் எடப்பாடி பழனிச்சாமி தவறுதலாக தனது கார் என்று நினைத்து உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற போட்டிருக்கிறார் . அதே மாதிரி கடந்த சில தினங்களுக்கு முன்பாக உதயநிதி ஸ்டாலினும் தனது கார் என்று நினைத்து எடப்பாடி பழனிச்சாமியின் காரில் ஏற முற்பட்டிருக்கிறார். முகப்பில் ஜெயலலிதா படம் இருந்ததை பார்த்ததும், ஆஹா இது நமது கார் இல்லை என்று உடனே திரும்பியிருக்கிறார். இந்த நிகழ்வுகளைத்தான் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசிய போது குறிப்பிட்டார்.
இந்நிலையில் இன்று கோவை விமான நிலையத்தில் அண்ணாமலையை சந்தித்த செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்ப, ‘’உதயநிதியின் கார் கமலாலயம் வருவதற்கு தகுதி இல்லை. அப்படியே அவர் வர முயற்சி செய்தாலும் கார் ஸ்டார்ட் ஆகாது. ரஜினியின் படிக்காதவன் படத்தில் வருவதுபோல் கார் ஸ்டார்ட் ஆகாது என்றார். அவர் மேலும், உதயநிதி சினிமா படத்தில் நடிப்பதை குறைத்து மக்கள் பணி செய்யட்டும் என்றார்.