மெயின்புரி தொகுதியில் தாமரை மலரும் என்று பா.ஜ.க.வினர் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள்.. சமாஜ்வாடி
மெயின்புரி மக்களவை தொகுதியில் தாமரை மலரும் என்று கூறி பா.ஜ.க.வினர் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள் என்று சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் ராம்கோபால் யாதவ் தெரிவித்தார்.
உத்தர பிரதேசம் மாநிலம் மெயின்புரி மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்த சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் கடந்த அக்டோபர் 10ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து அந்த தொகுதிக்கு டிசம்பர் 5ம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சமாஜ்வாடி கட்சியின் கோட்டையாக கருதப்படும் மெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் அந்த கட்சி வேட்பாளராக மறைந்த முலாயம் சிங் யாதவின் மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளராக ரகுராஜ் சிங் ஷக்யா போட்டியிடுகிறார்.
மெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று அந்த கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மெயின்புரியில் தாமரை மலரும் என்றும், சமாஜ்வாடி கோட்டை விழும் என்று பா.ஜ.க. தலைவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்து வருகின்றனர். இதற்கு சமாஜ்வாடி கட்சி பதிலடி கொடுத்துள்ளது. சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் ராம்கோபால் யாதவ் இது தொடர்பாக கூறியதாவது: கடந்த காலத்தில் முலாயம் சிங் யாதவ் பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதியில் தாமரை மலரும் என்று கூறி பா.ஜ.க.வினர் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள்.
மெயின்புரி நாடாளுமன்ற தொகுதியின் 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சமாஜ்வாடி கட்சி வெற்றிப்பெறப் போகிறது. டிசம்பர் 8ம் தேதி முடிவுகளை நீங்கள் பார்க்கலாம். பா.ஜ.க.வினர் நாடகங்களை நடத்துகிறார்கள், அதனால் அவர்களுக்கு எல்லாமே ஒரு நாடகமாக (அகிலேஷ் யாதவும் அவரது சித்தப்பா சிவ்பால் யாதவும் மீண்டும் இணைந்தது) தோன்றுகிறது. அவர்கள் உண்மையையும் யதார்த்தத்தையும் நாடகமாகவே உணர்கிறார்கள். அவர்களுடையது எல்லாம் பொய், நாடகம். சிறு பிரிவுக்கு பிறகு குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடுவது எதிர்காலத்திலும் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.