உங்களுக்கு இது நல்ல நாட்கள், ஆனால் உங்கள் ஆட்சி 12 கோடி மக்களுக்கு மோசமான நாட்கள்.. தாக்கரேவை தாக்கிய பா.ஜ.க.
உங்களுக்கு இது நல்ல நாட்கள், ஆனால் உங்கள் ஆட்சி 12 கோடி மக்களுக்கு மோசமான நாட்களை கொண்டு வந்துள்ளது என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை பா.ஜ.க.வின் ராவ்சாகேப் தன்வே கடுமையாக தாக்கினார்.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய ரயில்வே துறை இணையமைச்சருமான ராவ்சாகேப் தன்வே கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ராவ்சாகேப் தன்வே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ராவ்சாகேப் தன்வே கூறியதாவது: முதல்வர் பதவிக்காக சிவ சேனா எங்களை (பா.ஜ.க.) விட்டு சென்றது.
நாங்கள் அதை (சிவ சேனா) விடவில்லை. பா.ஜ.க.வை விட்டு ஓடி விட்டார்களா இல்லையா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எங்களுடன் திருமணம் (கூட்டணி) நிச்சயிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் மற்றவர்களுடன் (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) ஓடி விட்டனர். மகாராஷ்டிரா மக்கள் பா.ஜ.க.-சிவ சேனாவுக்கு (2019 சட்டப்பேரவை தேர்தலில்) வாக்களித்தார்கள்.
ஆனால் ஆட்சிக்காக நீங்கள் கிளர்ச்சி செய்து, எங்களை விட்டுவிட்டு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸூடன் சென்றீர்கள். நீங்கள் முதல்வர் ஆனீர்கள். உங்களுக்கு இது நல்ல நாட்கள், ஆனால் உங்கள் ஆட்சி 12 கோடி மக்களுக்கு மோசமான நாட்களை கொண்டு வந்துள்ளது. வரும் தேர்தலில் சிவ சேனாவை பா.ஜ.க. துண்டாடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.