எடப்பாடியை விசாரிக்க சொன்ன புகழேந்தியிடம் மீண்டும் விசாரணை
எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்கச் சொன்ன புகழேந்தியிடம் மீண்டும் ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணை நடைபெறுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சர்ச்சை எழுந்ததால் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ஆணையத்தில் முன்னாள் முதல்வரும் தற்போதைய அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம், சசிகலா உட்பட 156 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.
அப்பல்லோ மருத்துவமனை தரப்பு விசாரணைகளும் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இதையடுத்து ஆறுமுகசாமி இறுதி அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய இருக்கிறார் .
இந்த நிலையில் இந்த வழக்கில் முன்னாள் முதல்வரும் தற்போதைய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி மனு அளித்திருந்தார். அதை முன்னிட்டு அவரிடம் கடந்த 19ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து புகழேந்தி கடந்த 19 ஆம் தேதி அன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
ஆறுமுகசாமி ஆணையம் அவரிடம் விசாரணை நடத்தியிருந்ததை அடுத்து மீண்டும் ஏப்ரல் 26ஆம் தேதியன்று மறுவிசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அவரிடம் கூறப்பட்டிருந்தது. அதனடிப்படையில் இன்று 26 தேதி மீண்டும் ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணைக்காக ஆஜராகிறார் புகழேந்தி.