காவி உடை! செருப்பு வீச்சு! சர்ச்சை டுவிட்! அர்ஜூன் சம்பத் மீது வழக்கு
டிசம்பர் ஆறாம் தேதியான நேற்று அம்பேத்கர் நினைவு தினம். இதை முன்னிட்டு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தனது டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.
Jai Bheem
— Arjun Sampath (@imkarjunsampath) December 7, 2022
Jai Ambedkar
Ban VCK pic.twitter.com/PAf8FK1t8e
இந்துக்கள் மட்டுமே போட்டியிடும் வகையில் தனிதொகுதி அமைத்து தந்து இந்துக்களாக இருந்தால் மட்டுமே இட ஒதுக்கீடு என்ற சட்டமாக்கிய அறிவுலக மேதை அண்ணல் அம்பேத்கருக்கு எங்களின் நினைவு அஞ்சலி என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் பொதுச் செயலாளர் குருமூர்த்தி பெயரில் நேற்று முன்தினம் இரவு அம்பேத்கர் காவி உடை அணிந்து நெற்றியில் திருநீறு பூசி இருப்பது போல போஸ்டர்கள் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. இதை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போஸ்டர்களை அகற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று காவல் நிலையத்தில் தெரிவித்து இருந்தன.
இதை அடுத்து போலீசார் போஸ்டர்களை அகற்றினர். ஆனாலும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்பினர் கும்பகோணம் டிஎஸ்பி அலுவலகம் முன்பாக திரண்டு போஸ்டர் ஒட்டிய குருமூர்த்தியை கைது செய்ய வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர் . பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் குருமூர்த்தியை கைது செய்தார் டிஎஸ்பி. இதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில், சென்னை அடையாறு அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர்கள் வன்னி அரசு, ரஜினிகாந்த் ஆகியோர் தலைமையில் விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். செருப்புகளை வீசியும் அர்ஜுன் சம்பத்தை தாக்கினர்.
இதுகுறித்து அர்ஜூன் சம்பத், அம்பேத்கருக்கு காவி நிறம் அணிவித்தது இவர்களை கோபப்படுத்துகிறது என்றால் இத்தனை நாளாக இவர்கள் அம்பேத்கர் என்ற மாமேதையை சாதி எனும் கூண்டில் அடைத்து வைத்தது சரியா? அம்பேத்கர் முகமூடி மாட்டிக்கொண்டு சாதி அரசியல் செய்துவரும் கூட்டத்தின் முகத்திரையை கிழிப்போம்! என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இரு பிரிவினர் இடையே பகைமையை உண்டாக்கும் வகையில் டுவிட் செய்ததாக அர்ஜூன் சம்பத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட வல்லுநர்களுடனான ஆலோசனைக்கு பின்னர் கோவை பந்தைய சாலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.