உச்சக்கட்ட மோதலின் போது முறுக்கு சாப்பிட்ட சசிகலா
இங்க என்ன நடக்குது? நீ பாட்டுக்கு மிக்சர் திண்ணுக்கிட்டு இருக்கியே என்று நாட்டாமை படத்தில் டென்ஷன் ஆகும் கவுண்டமணி காமெடி போல, அதிமுகவில் இவ்வளவு களேபரம் நடக்கும்போது அதை முறுக்கு சாப்பிட்டுக்கிட்டே ரசித்திருக்கிறார் சசிகலா.
ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓ. பன்னீர் செல்வத்தை தொடர்ந்து முதல்வர் பொறுப்பில் வைத்திருந்தால் தனக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடும் என்று நினைத்து, எடப்பாடியை ரொம்ப டம்மியாக எடைபோட்டு அவரை முதல்வர் ஆக்கினார் சசிகலா . ஆனால் இன்றைக்கு எல்லோரையும் தூக்கி அடித்து விட்டு அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆகிவிட்டார் எடப்பாடி.
ஓ. பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையில் இருக்கும் சண்டையில் இடையில் புகுந்து அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிவிடலாம் என்று எத்தனையோ பகீரத முயற்சிகளை எடுத்து வந்தார் சசிகலா. அவரின் எந்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை. கடைசியில் ஒட்டுமொத்த அதிமுகவையும் தன் கைக்குள் கொண்டு வந்துவிட்டார் எடப்பாடி.
நேற்று நடந்த அதிமுக பொதுக்குழுவில் கூடியிருந்த அனைவருமே எடப்பாடியின் ஆதரவாளர்கள் என்பதால் பெரும் அமளி ஏற்பட்டது. ஆளாளுக்கு ஓபிஎஸ்-ஐ வெறுப்பேற்றினார்கள். துரோகி பன்னீர்செல்வம் வெளியே போ, ஸ்டாலினை சந்தித்த ரவிந்திரநாத்துக்கு கட்சியில இடம் கிடையாது என்று கூச்சல் போட்டுக் கொண்டே இருந்தவர்கள், ஒரு கட்டத்தில் ஓபிஎஸ்-ஐ நோக்கி தண்ணீர் பாட்டிலையும் வீசி பரபரப்பை ஏற்படுத்தினர் .
பொறுமை இழந்த ஓபிஎஸ்சும் அவரது ஆதரவாளர்களும் வெளிநடப்புச் செய்து விட்டனர். அதிமுகவில் நடந்த இந்த உச்சகட்ட மோதலை வீட்டில் டிவி முன்பாக அமர்ந்து கொண்டு முறுக்கு சாப்பிட்டுக் கொண்டே ரசித்து இருக்கிறார் சசிகலா.