முதல்வருடன் இருக்கும் சில கருப்பு புள்ளிகள் - ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பரபரப்பு
முதல்வருடன் இருக்கும் சில கருப்பு புள்ளிகளால் திமுகவுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்.
தருமபுரம் ஆதீனம் மடத்தின் சார்பில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று தமிழக அரசு தடை விதித்து இருக்கிறது. திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில கட்சிகள் இந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் இந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்திருக்கிறார்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. உயிரை கொடுத்தாலும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை நடத்திய தீருவோம் என்று மடாதிபதிகள், ஜீயர்கள், ஆதீனங்கள் உறுதியாக இருக்கின்றனர். பட்டின பிரதேசத்தை பாஜகவே முன் நின்று நடத்தும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். அவர், ‘’பட்டினப்பிரவேசம் செய்ய தடை விதித்து இருப்பது மனவேதனை அளிக்கிறது. ஆதீனங்கள் விஷயத்திலும் மடாதிபதிகள் விஷயத்திலும் கோயில் விசயத்திலும் யாரும் தலையிட்டு இதை செய்யக்கூடாது அதை செய்யக்கூடாது எனக் கூற அதிகாரம் இல்லை’’என்கிறார்.
மேலும், ‘’பட்டினப்பிரவேசம் தொடர்பாக ஆதீனங்கள், மடாதிபதிகள் முதல்வரை சந்தித்து பேச இருக்கிறோம். தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது போன்ற ஆன்மீக விஷயத்தில் தலையிடுவதால் தான் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் உண்டாகி வருகிறது. முதல்வருடன் இருக்கும் சில கருப்பு புள்ளிகளால் தான் திமுகவுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது ’’என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், ‘’ கிரிக்கெட் வீரர்கள் வெற்றி பெறும்போதும் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெறும்போது தோளில் தூக்கி சுமக்கிறார்கள். அது மனிதரை மனிதன் தூக்கி செய்வதுதானே? அதை குற்றம் என்று சொல்ல சொல்ல முடியுமா? குருவை தூக்கி கொண்டாடும் விஷயம் பட்டினப்பிரவேசம். இதில் யாரும் தலையிடக்கூடாது பட்டினப்பிரவேசத்தை கண்டிப்பாக நடத்தியே தீருவோம்’’ என்று தெரிவித்திருக்கிறார் உறுதியாக.
மத விவகாரங்களில் இதை செய் அதை செய் என யாரும் தலையிட உரிமை கிடையாது என்று சொல்கிறார் அழுத்தமாக.