ஸ்டாலினா? டி.ஆர்.பாலுவா? திமுக தலைவர் யார்?
ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சேர்ந்து கட்சி தலைவர் ஆலோசித்து முடிவெடுத்து பின்னர் அறிவிக்கப்படுகிறது. இதில் தலைவருக்குத்தான் முழு பொறுப்பு. கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினால் அதற்கு வரவேற்பும், பாராட்டுகளும் தலைவருக்குத்தான். அதேபோல், வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் விமர்சனங்களும் கண்டனங்களும் தலைவருக்குத்தான்.
ஆனால், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியோ, ‘’தேர்தல் அறிக்கை தயார் செய்தது டி.ஆர்.பாலுதான். அதில் சொன்னதை நிறைவேற்றாமல் போனால் அவரிடம்தான் போய் கேட்க வேண்டும். அவர் வீட்டு வாசலில்தான்போய் மறியல் போராட்டம் நடத்த வேண்டும். அது தெரியாமல் சில முண்டங்கள், முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கேட்க வேண்டிய ஸ்டாலின் அல்ல; டி.ஆர்.பாலுதான்’’ என்று பேசியிருக்கிறார்.
திமுகவின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். ஆர்.எஸ்.பாரதியின் இந்த பேச்சு, ஸ்டாலினா? டி.ஆர்.பாலுவா? திமுக தலைவர் யார்? என்கிற சலசலப்பையும், ’’முண்டங்கள்’’என்கிற பேச்சு சர்ச்சையினையும் ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னர் திண்டுக்கல்லில் நடந்த திமுகவின் ஓராண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, முதல்வர் அண்ணாதுரையை பற்றி ஆன்மீக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார் தவறாக பேசிவிட்டார். அதனால் அவருக்கு என்ன நடந்தது தெரியுமா? அவர் வெளியே எங்குமே நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதே போன்ற நிலைமை அண்ணாமலைக்கு ஏற்படும் என்று எச்சரித்திருந்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியே நடமாட முடியாது என்று எச்சரித்திருந்ததால், பாஜகவினர் கொதித்தெழுந்து கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.
தற்போது, ‘’முண்டங்கள்’’பேச்சுக்கும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.