போதி தர்மரின் மரபணுவில் வந்தவர் ஸ்டாலின் -அடித்துவிடும் செல்வபெருந்தகை
போதி தர்மரின் மரபணுவில் வந்தவர் முதல்வர் ஸ்டாலின் என்று அடித்துவிட்டார் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை.
முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 இன் கீழ் உரையாற்றியபோது , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்ல அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது என்று குறிப்பிட்டார். இதற்காக நான்கு மண்டலங்களில் தலா ஒன்று வீதம் நான்கு ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும் என்று அறிவித்தார். ஒலிம்பிக் தங்கம் தேடுதல் திட்டம் 25 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய முதல்வர், அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா மூன்று கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார் . வட சென்னை சென்னையில் 10 கோடி ரூபாய் செலவில் குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் என்றும். மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு என்று தனியாக பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
விளையாட்டுத்துறையில் மேலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் . இதையடுத்து விளையாட்டு துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து பேசினார் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை. அப்போது அவர் முதல்வரை போதிதர்மரின் மரபணுவில் வந்தவர்தான் முதல்வர் ஸ்டாலின் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய செல்வபெருந்தகை, முதல்வரின் உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவிற்கு ராகுல்காந்தி வந்திருந்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் வயது குறித்து கேட்டார். அவர் இவ்வளவு இளமையாக இருக்கிறாரே அதற்கு என்ன காரணம் என்பது குறித்து பேசினார். அதற்கு முதல்வர், வாரம் தோறும் சைக்கிள் ஓட்டுவதால் கூறியதாக தெரிவித்தார். இதற்கு முதலமைச்சரிடம் பேசிய ராகுல் காந்தி , அடுத்த முறை வரும்போது முதல்வர் ஸ்டாலினுடன் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற விருப்பத்தை முன் வைத்தார் என்பதை நினைவு படுத்திப் பேசினார்.