எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? ஆ.ராசாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு - முதல்வர் என்ன சொல்லப்போகிறார்?

 
as

 எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்?  எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்ட ஆ. ராசாவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

 ஆ. ராசா பேசினாலே அது சர்ச்சை தான் என்ற நிலை இருந்து வருகிறது.  இந்த நிலையில் அண்மையில் சென்னையில் நடந்த தி.க. தலைவர் வீரமணிக்கு நடந்த பாராட்டு விழாவில் திமுக எம்.பி. ஆ. ராசா பேசியபோது,   உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது?   நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால்.. இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால் ..பெர்சியனாக இல்லாமல் இருந்தால்.. நீ இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது .  இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா?  என்று கேட்டார்.


 தொடர்ந்து பேசிய ஆ. ராசா,   இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்.   சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்.  இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்.  இப்போது சொல்லுங்கள் எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்?  எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்?  என்ற கேட்டார்.

 அவர் மேலும் ,  இந்த கேள்வியை உரக்கச் சொன்னால்தான் அது சனாதனத்தை முறியடிக்கின்ற அடி நாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும் திமுகவும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்றார்.

 ஆ. ராசா பேசிய இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,   திமுக எம்பி மீண்டும் மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை வெளிப்படுத்துகிறார்.   மற்றவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்கு அவர் குறிக்கோளாக கொண்டிருக்கிறார்.   தமிழகம் தங்களுக்கு சொந்தம் என்று நினைக்கும் இந்த அரசியல் தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிஷ்டவசமானது என்று தெரிவித்திருக்கிறார் .

ஆ. ராசாவின் இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி பலரையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது.   ஆ .  ராசா இந்துக்கள் மீது தொடர்ந்து வன்மத்தை கக்குவது சரியா?  அவரது பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று பலரும் கேட்டு வருகின்றனர்.


 ஆ .ராசாவுக்கு எதிராக இப்படி எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் ஆ. ராசா தனது வலைத்தள பக்கத்தில்,   ’’சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி–வேலைவாய்ப்பு-கோவில் நுழைவு மறுக்கப்பட்டது. அரசியல் அதிகாரத்தாலும் – பரப்புரையாலும் 90% இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும்?’’ என்று கேட்கிறார்.