2025ம் ஆண்டு வரை பீகாரில் நிதிஷ் குமார் முதல்வராக நீடிப்பார்... ஊக செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பா.ஜ.க. எம்.பி.
2025ம் ஆண்டு வரை பீகாரில் நிதிஷ் குமார் முதல்வராக நீடிப்பார், அவரை மாற்றும் பேச்சுக்கு இடமில்லை என பா.ஜ.க. எம்.பி. சுஷில் குமார் மோடி தெரிவித்தார்.
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் கூட்டணி கட்சிகளுக்கு (பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம்) இடையே அடிக்கடி உரசல்கள் ஏற்பட்டாலும் அது ஆட்சியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இந்த சூழ்நிலையில், முதல்வர் நிதிஷ் குமாரை மாற்ற பா.ஜ.க. முயற்சி செய்வதாக ஊக செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை பா.ஜ.க. எம்.பி. சுஷில் குமார் மோடி மறுத்துள்ளார்.
பா.ஜ.க.வின் மாநிலங்களவை எம்.பி. சுஷில் குமாா மோடி இது தொடர்பாக கூறியதாவது: 2025ம் ஆண்டு வரை பீகாரில் நிதிஷ் குமார் முதல்வராக நீடிப்பார். ஐக்கிய ஜனதா தள தலைவரை (நிதிஷ் குமார்) மாற்ற பா.ஜ.க. எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நிதிஷ் குமாருக்கு பதிலாக பா.ஜ.க. தனது சொந்த முதல்வரை நியமிக்க விரும்புவதாக எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்புகின்றன. பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தனது பதவி காலத்தை நிறைவு செய்யும் என்று பா.ஜக. தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் பல முறை தெளிவுப்படுத்தியுள்ளார்.
அப்போதும், பா.ஜ.க. முதல்வராக பதவியேற்க விரும்புவதாக எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்பி வருகின்றன. சமீபத்தில் நடைபெற்ற போச்சாஹா இடைத்தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்ததற்கு, நிதிஷ் குமாரை மாற்ற பா.ஜ.க. விரும்புகிறது என்று எதிர்க்கட்சிகளின் கூற்றுகளால் உருவாக்கப்பட்ட சூழ்நிலை காரணமாக இருக்கலாம். 2025ம் ஆண்டு வரை நிதிஷ் குமாரின் தலைமையில் செயல்பட தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆணை இருக்கும்போது, மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நிதிஷ் மாற்றப்படுவது போன்ற அனைத்து வகையான அபத்தமான ஊகங்களையும் தூண்டுவதன் மூலம் அரசியல் ஸ்திரமின்மையை உருவாக்க எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.