மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியை காவல்துறையால் காப்பாற்ற முடியாது.. சுவேந்து ஆதிகாரி பரபரப்பு
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸின் ஆட்சி இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வந்து விடும், இந்த ஆட்சியை காவல்துறையால் காப்பாற்ற முடியாது என பா.ஜ.க.வின் சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக பா.ஜ.க.வின் சுவேந்து ஆதிகாரி உள்ளார். மேற்கு வங்கம் பர்பா மேதினிபூர் மாவட்டத்தில் அவரது (சுவேந்து) சொந்த ஊரான காந்தியில் பா.ஜ.க. நடத்திய துர்கா பூஜைக்கு பிந்தைய கூட்டத்தில் சுவேந்து ஆதிகாரி கலந்து கொண்டார்.
அந்த கூட்டத்தில் சுவேந்து ஆதிகாரி பேசுகையில் கூறியதாவது: காவல்துறையினர் அடிமைகளாகி,இந்த ஊழல் ஆட்சியை (மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு) காக்கிறார்கள். ஆனால், இந்த ஆட்சியின் காலம் கடந்து விட்டது. இன்னும் சில மாதங்களில் இவர்களின் ஆட்சி முடிந்து விடும். இனி இந்த ஆட்சியை காவல்துறையால் காப்பாற்ற முடியாது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாயத்து தேர்தலில், பா.ஜ.க. அங்குலம் அங்குலமாக போட்டியிடும்.
பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள, பா.ஜ.க. ஒவ்வொரு சாவடியிலும் வலுவான அணிகளை அமைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். சுவேந்து ஆதிகாரியின் கருத்து குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூறுகையில், சுவேந்து ஆதிகாரியின் கருத்துக்கள் ஒன்றும் இல்லாதது என தெரிவித்தது. மேற்கு வங்கத்தில் அபிஷேக் பானர்ஜி உள்பட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பலர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.