பா.ஜ.க.வின் இன்றைய சாதனை.. ரூபாய் மதிப்பு வரலாறு காணா அளவுக்கு வீழ்ச்சி.. கவிதா கிண்டல்..

 
கவிதா

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி கண்டு இருப்பது பா.ஜ.க.வின் இன்றைய சாதனை என தெலங்கானா மேலவை உறுப்பினர் கவிதா கிண்டல் செய்தார்.

சர்வதேச அளவில் நேற்று பல்வேறு கரன்சிகளுக்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தது. இதன் எதிரொலியாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 77.50ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. அண்மையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,000த்தை தாண்டியது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு

இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சி, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு,வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை குறிப்பிட்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி கடுமையாக தாக்கியுள்ளது. தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், தெலங்கானா மேலவை உறுப்பினருமான கல்வகுந்த்லா கவிதா டிவிட்டரில், இன்று பா.ஜ.க.வின் சாதனை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 77.40ஆக உள்ளது. 

பா.ஜ.க.கேஸ் சிலிண்டரின் விலை ரூ.1000-த்தை தாண்டியுள்ளது. வேலையின்மை விகிதம் 7.83 சதவீதமாக உள்ளது. ஆனாலும் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று நாம் நம்ப வேண்டும் என்று மோடி சர்க்கார் விரும்புகிறது என பதிவு செய்துள்ளார்.