தெலங்கானா முதல்வருடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு.. 2023 தேர்தலுக்காக ஐ-பேக் நிறுவனத்தை ஒப்பந்தம் செய்த டி.ஆர்.எஸ்.
2023ம் ஆண்டில் நடைபெற தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்காக தேர்தல் பணி செய்வதற்காக பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்தை கே.சந்திரசேகர் ராவ் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்.
தெலங்கானாவில் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருவது போன்று தெரிகிறது. ஏனென்றால் அண்மையில் அங்கு நடைபெற்ற தேர்தல்களில் முதல்வர் சந்திரசேகர் ராவ் கட்சி தடுமாற்றங்களை சந்தித்தது. அதேசமயம் அந்த மாநிலத்தில் பா.ஜ.க. படிப்படியாக வளர்ச்சி கண்டு வருகிறது.
இதேநிலை நீடித்தால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி தக்கவைத்து கொள்வது சிரமம் என்பதை முதல்வர் கே.சந்திரசேகர் உணர்ந்துள்ளார். இதனால் 2023 தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு வேலை செய்வதற்காக தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்தை நாடியுள்ளார். கடந்த சனிக்கிழமையன்று காலை ஹைதராபாத் சென்ற பிரசாந்த் கிஷோர், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இரவு தங்கினார்.
பிரசாந்த் கிஷோரும், முதல்வர் கே.சந்திரசேகர் ராவும் தீவிரமாக ஆலோசனை நடத்தினர். தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை கையாள ஐ-பேக் நிறுவனத்தின் ரிஷி சிங் ஹைதராபாத்தில் இருக்கிறார். தெலங்கானாவில் காங்கிரஸ் முக்கிய கட்சியாக இருக்கும் சூழலில், தெலங்கானா ராஷ்டிர சமிதி மற்றும் ஐ-பேக் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.