குறிவைக்கும் ஸ்டாலின் - புலம்பும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
அதிமுகவுக்கு இரண்டு மாநிலங்களவை சீட் இருப்பதால் அந்த இரண்டு சீட்டில் ஒன்று ஓபிஎஸ் ஆதரவாளருக்கு, ஒன்று எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளருக்கு என்று கணக்கு போட்டு இருந்திருக்கிறார்கல். ஆனால், இரண்டையும் தனது ஆதரவாளருக்கு என்று எடப்பாடி பழனிச்சாமி காய் நகர்த்தி வருகிறாராம். இதனால் புலம்பும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மகிழும்படி அந்த இரண்டில் ஒன்றை குறி வைத்து இருக்கிறது திமுக என்று தகவல்.
தமிழகத்தில் காலியாக இருக்கும் ஆறு மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான தேர்தல் ஜூன் மாதம் பத்தாம் தேதி நடைபெறுகிறது. எம்எல்ஏக்களின் அடிப்படையில் திமுகவுக்கு 4 எம்பி சீட்களும் அதிமுகவுக்கு இரண்டு சீட்களும் ஒதுக்கப்பட்டுள்ளன . இதில் திமுக தனக்கு இருக்கும் நான்கு சீட்டில் மூன்று சீட்டுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. ஒரு சீட் காங்கிரசுக்கு என்று ஒதுக்கி இருக்கிறது. அந்த ஒரு சீட் யாருக்கு என்பதில் காங்கிரஸில் போட்டி நிலவுகிறது .
அதிமுகவில் இரண்டு சீட் இருக்கும் நிலையில் அதில் ஒன்று ஓபிஎஸ் ஆதரவாளருக்கு இன்னொன்று எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளருக்கு என்று கட்சியினரே கணக்கு போட்டு இருந்தனர். அப்படித்தான் ஓபிஎஸ் கணக்குப் போட்டு இருந்திருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ ரெண்டு சீட்டும் தனது ஆதரவாளர்களுக்குத் தான் என்று காய் நகர்த்தி வருகிறாராம் . ஜெயக்குமார், சி.வி.சண்முகம் என்று தனது ஆதரவாளர்கள் இரண்டு பேருக்கும் அந்த இரண்டு சீட்டை கொடுத்து விட அவர் காய் நகர்த்தி வருகிறாராம்.
வழக்கம்போல் இந்த முறையும் நாம ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கிறோமே என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புலம்பி வருகிறார்களாம். இந்த நிலையில் திமுக 4 வேட்பாளருக்கு பதிலாக ஐந்தாவதாக ஒரு வேட்பாளரை திடீரென்று நிறுத்தவும் யோசித்து வருகிறதாம். அப்படி ஒரு வேலை ஐந்தாவது வேட்பாளரை நிறுத்திவிட்டால் அதிமுகவுக்கு அது பாதகமாக போய்விட வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.
அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவை என்ற நிலை இருக்கிறது. இதற்காகத்தான் கூட்டணி கட்சிகளின் ஆதரவை முன்கூட்டியே கேட்டு பெற்று இருக்கிறது அதிமுக. பாஜகவும், பாமகவும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறது. ஆனாலும் கடைசி நேரத்தில் திமுக ஐந்தாவது வேட்பாளரை நிறுத்தினால் கூட்டணி கட்சிகள் ஏதாவது பல்டி அடித்து விட்டால் அதிமுகவுக்கு ஒரு சீட் தான் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒன்று நடந்தால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நல்லது என்று நினைக்கிறார்களாம்.