பணம் கொடுத்தால் ஏழை மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று கே.சந்திரசேகர் ராவ் நம்புகிறார்... பா.ஜ.க. தாக்கு

 
கே.சந்திரசேகர் ராவ்

பணம் கொடுத்தால் ஏழை மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என தெலங்கான முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் நம்புகிறார் என தெலங்கானா பா.ஜ.க. தலைவர் பண்டி சஞ்சய் குற்றம் சாட்டினார்.

தெலங்கானாவில் மஹ்பூப்நகரில் நடைபெற்ற கூட்டத்தில் அம்மாநில பா.ஜ.க. தலைவர் பண்டி சஞ்சய் உரையாற்றுகையில் கூறியதாவது: பணம் கொடுத்தால் ஏழை மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று கே.சந்திரசேகர் ராவ் நம்புகிறார். பணத்தை அவரிடமிருந்து வாங்குங்கள் என்று நான் சொல்கிறேன். இதனால் அவரது வங்கி இருப்பு குறையும், இல்லையெனில் அவர் பணக்காரனாகி, நீங்கள் ஏழையாகி விடுவீர்கள். 

பண்டி சஞ்சய் குமார்

அவர் ரூ.5 ஆயிரம் அல்லது ரூ.10 ஆயிரம் கொடுத்தால் நீங்கள் வாங்கி கொள்ள வேண்டும். தேர்தலில் அவர் எந்த பணத்தை விநியோகித்தாலும் அது பிரதமர் மோடி பல்வேறு அரசு திட்டங்களுக்காக கொடுத்த உங்கள் பணம்தான், ஆனால் அந்த பணத்தை அவர் (கே.சந்திரசேகர் ராவ்) தேர்தலுக்காக பயன்படுத்துகிறார். ஏழை மக்கள் தங்கள் வாக்கை விற்க மாட்டார்கள். ஏழைகளுக்கு நேர்மையும் அர்ப்பணிப்பும் இருக்கும். 

பா.ஜ.க.

டுப்பாக் மற்றும் ஹுசூராபாத் இடைத்தேர்தல்களின்போது, தெலங்கான ராஷ்டிர சமிதி வாக்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ10 ஆயிரம் வரை விநியோகித்தது, ஆனால் மக்கள் அதை வாங்கி கொண்டாலும் அவர்கள் வாக்களிக்கும்போது  பா.ஜ.க.வுக்கு வாக்களித்தனர். இந்த இரண்டு இடைத்தேர்தல்களிலும், தெலங்கானா ராஷ்டிர சமிதி வசம் இருந்த தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெற்றோம்.  அதேபோல் கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலிலும் நாங்கள் 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.