’’மார் தட்டி கொள்ளும் அரசியல் கட்சிகள் வெட்கப்பட வேண்டிய கேடுகெட்ட நிலை’’

 
se

சாதிக்கயிறு  மோதல் தொடர்பாக 3 மாணவர்கள் மீது கொலை வழக்கு பதிவாகி இருக்கிறது.   நெல்லை மாவட்டத்தில் முக்கூடல் அடுத்த பாப்பாக்குடி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வ சூர்யா,  கிடைத்த பள்ளக்கால் பொதுக்குடி  அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படித்து வந்துள்ளார் .

கடந்த 25ஆம் தேதியன்று  செல்வ சூர்யாவுக்கும்  அதே பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும்  வேறு சமூகத்தைச் சேர்ந்த மாணவருக்கும் இடையே சாதிக்கயிறு தொடர்பாக வாக்குவாதம் எழுந்திருக்கிறது.   இரு தரப்பு மாணவர்களும் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.   இந்த மோதலில் செல்வ சூர்யாவை கல்லால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.  இதில் படுகாயமடைந்து ரத்தம் கொட்டி கிடந்த செல்வ சூர்யாவை  அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சூர்யா இன்று காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.   இதையடுத்து மூன்று மாணவர்கள் மீது கொலை வழக்கு பதிவாகி இருக்கிறது.

n

இதுகுறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,  ‘’தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களிடையே ஒழுக்கக் குறைபாடு உள்ளதாக கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்கள் வெளிவநது கொண்டிருக்கும் நிலையில், நெல்லை மாவட்டம் பள்ளக்கால் பொதுக்குடியில் உள்ள அரசு பள்ளியில், சாதி அடையாள கயிறு கட்டியது தொடர்பான விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் நடந்த தாக்குதலில் ஒரு மாணவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது’’என்கிறார்.

தொடர்ந்து அவர் அதுகுறித்து,  ‘’இது ஏதோ தற்செயலாக நடந்துள்ள சம்பவமாக இருக்க வாய்ப்பில்லை. பல நாட்களாக இந்த விவகாரம் புகைந்து கொண்டிருந்திருக்க கூடிய சூழ்நிலையில்,  ஆசிரியர்கள் மற்றும் காவல் துறையினர்  தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்திருந்தால் மோதலையும், உயிரிழப்பையும் தடுத்திருக்கலாம். ஆனால், ஆசிரியர்களின், நிர்வாகத்தின், கல்வி துறையின் அலட்சியமே இந்த நிலைக்கு காரணம்.  தொடர்புடைய பள்ளி நிர்வாகிகள் மற்றும் துறை அதிகாரிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு தாமதிக்கக்கூடாது’’ என்கிறார். 

மேலும், ’’இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது இருக்க ஆவன செய்ய வேண்டியது அரசின் கடமை.  சாதிய சிந்தனையற்ற,அனைத்து மாணவர்களையும் கண்டிப்போடு, அரவணைத்து செல்ல கூடிய ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை அந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் உடன் நியமிக்க வேண்டும். மாணவர்களிடையே சாதிய வெறியை தூண்டும் நபர்களை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு. இல்லையேல் அடுத்த தலைமுறையின் வளர்ச்சி கேள்விக்குறியே!  சாதியை ஒழித்துவிட்டதாக மார் தட்டி கொள்ளும் அரசியல் கட்சிகள் வெட்கப்பட வேண்டிய கேடுகெட்ட நிலை’’ என்கிறார் கடுமையாக.