’’ஓபிஎஸ் -இபிஎஸ் இடையே மீண்டும் பிரச்சை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை’’
ஓபிஎஸ்- இபிஎஸ் இருதரப்பினர் இடையே இந்த சமாதானமும் ஏற்படவில்லை. இதனால் மீண்டும் பிரச்சனை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதனால் சீல் வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தால் மீண்டும் பிரச்சனை ஏற்படலாம் என்று காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது. அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட வழக்கில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து காவல்துறை தாக்கல் செய்திருக்கும் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகை சென்னை ராயப்பேட்டையில் அமைந்திருக்கிறது. ஓ. பன்னீர்செல்வம் -எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் இடையே ஏற்பட்ட அதிகார போட்டியால் கடந்த 11ஆம் தேதி அன்று தலைமை கழக அலுவலகத்தில் நடந்த கலவரத்தின் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கவனத்தில் கொண்டு அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்திருக்கிறது தமிழக அரசு. இதை எதிர்த்து சீலை அகற்ற வேண்டும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் இரு தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுக தலைமை அலுவலகம் முன்பாக நடந்த கலவரம் தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
.காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அந்த அறிக்கையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் பொது அமைதி, பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பு முக்கியமாக கருதுவதாக கூறப்பட்டிருக்கிறது. பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் சீல் வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. போலீசார் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது என்றும், வன்முறை சம்பவத்திற்கு பின்னர் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டிருக்கிறது.
மேலும் , அதிமுக தலைமை அலுவலகம் யாருக்கும் சொந்தம் என்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் சீல் வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட அதிகாரியையோ சிவில் நீதிமன்றத்தையோ அணுகலாம் என்று நீதிமன்ற தீர்ப்புகள் இருக்கின்றன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது . இன்னமும் இரு தரப்பினர் இடையே எந்த சமாதானமும் ஏற்படவில்லை. அப்படி இருக்கும்போது சீல் வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தால் மீண்டும் பிரச்சனை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
ராயப்பேட்டையில் நடந்த வன்முறை தொடர்பாக இதுவரைக்கும் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்த அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது . காவல்துறையின் இந்த அறிக்கையை கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.