பாஜகவுக்கு எதிராக பொங்கி எழுந்த முதல்வர் ஸ்டாலின்!
முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மாவட்டங்களுக்கு சென்று திரும்பி இருக்கிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் திமுக அரசு மீது புகார் கொடுத்திருக்கிறார். சீமான் - சவுக்கு சங்கர் திமுகவுக்கு எதிராக புறப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர் தொண்டர்களுக்கு, ‘பகை வென்று பணி தொடர அணிவகுப்போம்’ என கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்த கடிதத்தில், தமிழ்நட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் ஏற்றத்தாழ்வின்றி சமச்சீரான வளர்ச்சியைப் பெற்றாக வேண்டும் என்கின்ற நோக்கத்துடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதில் முனைப்பாகவும் விறுவிறுப்பாகவும் செயல்பட்டு வருகிறது திராவிட மாடல் அரசு என்ற முதல்வர் ஸ்டாலின், மூன்று மாவட்ட பயண அனுபவங்களை குறிப்பிட்டிருக்கிறார்.
அவர் மேலும் அக்கடிதத்தில், மக்கள் நலனைக் காக்கும் அரசாக மக்களுக்கு ஆபத்பாந்தவனாக விளங்குகிற அரசாக ஓர் அரசு எப்படி நடைபெறவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிற அரசாகத் திகழ்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தின் திராவிட மாடல் அரசுக்கு எதிராக, சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்பட பல்வேறு சங்கடங்களையும் குழப்பங்களையும் உருவாக்கிட, அரசியல் எதிரிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சதித்திட்டம் தீட்டி, பொருளில்லாப் புதுப்புது வதந்திகளைப் பரப்பிட நினைக்கிறார்கள். நல்லரசைக் கெடுக்க நினைக்கிற அத்தகையவர்களின் நயவஞ்சக எண்ணத்தை நசுக்கி, முனை மழுங்கச் செய்ய வேண்டிய பெரும்பணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு உடன்பிறப்புக்கும் உண்டு என்று குறிப்பிட்டிருக்கும் முதல்வர்,
எதிரிகள் நமக்கு எதிராக வேண்டுமென்றே திட்டமிட்டுப் பொல்லாங்குகளையும், பச்சைப் பொய்களையும் பரப்புவார்கள். உண்மைகள் நம் பக்கமே இருப்பதால், அந்தப் பொய்களை நாம் பொடிப் பொடியாக்கித் தூக்கி எறிய வேண்டும். எதிரிகள் நமக்கெதிராக வெற்று வதந்திகளைக் கிளப்புவார்கள்; அவற்றைப் புள்ளிவிவரங்கள் மூலம் அறுத்தெறிய வேண்டும்.
எதிரிகள் நமக்கெதிராக அவதூறுகளைக் கட்டவிழ்த்து விடுவார்கள். அவற்றை அடித்து நொறுக்குகின்ற வகையில் நம்மிடம் குவிந்துள்ள சாதனைத் திட்டங்களை முன் வைக்கவேண்டும். ஊடகங்களையும், சமுக வலைத்தளங்களையும் நமக்கெதிராகத் திருப்பிட முனைவார்கள். ஒவ்வொரு உடன்பிறப்பும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், தேநீர்க்கடை , திண்ணைப் பிரச்சாரம் மூலமாகவும் கழகக் கொள்கைகளை முழங்கும் ஊடகமாக மாறிட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடைபெறுகிற ஆரிய - திராவிட பண்பாட்டுப் போரில், திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து ஜனநாயக யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இனத்தின் மீதும், மொழியின் மீதும், மாநிலத்தின் உரிமைகள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள போரை நேர்மையாக எதிர்கொண்டு வருகிறோம். அதில் மகத்தான வெற்றியையும் பெற்றிருக்கிறோம். அந்த வெற்றி தொடர்ந்திட, கழக அணிகள் அனைத்தும் அணிவகுத்து ஆயத்தமாக நின்றிட வேண்டும்.
‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்பதற்கேற்ப அரசியல் - சமுதாய - பண்பாட்டுப் பகைவரை வென்றிடவும், நம் தாய்மொழியாம் தமிழையும், தாய் நிலமாம் தமிழ்நாட்டையும், இந்திய ஒன்றியம் முழுவதற்குமான ஜனநாயகத்தையும் காத்திடக் களம் காண வேண்டிய கடமை வீரர்களாக கழக அணியினர் திகழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
கொள்கைகளும் சாதனைகளும்தான் நமக்கு வாளும் கேடயமுமாகும். அதனைத் தமிழ்நாட்டின் குக்கிராமங்கள் வரை வீடு வீடாகக் கொண்டு சேர்க்க வேண்டும். இனப் பகைவர்கள் இங்குள்ள அரசியல் எதிரிகளைப் பயன்படுத்திக் கொண்டு, வஞ்சகச் சூழ்ச்சிகளால் வலை விரித்து தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது ஊடுருவி விடலாம் என ஏங்கினாலும், அவர்களுக்குக் கிஞ்சித்தும் இங்கே இடமே இல்லை என்பதை நிரூபிக்கக் கூடிய ஆற்றல்மிக்க படையாக கழக அணிகள் செயல்பட வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.