எல்லாம் எடப்பாடி மயம் ஆனது இப்படித்தான்!
அந்த அமைச்சரவையில் எத்துனையோ பேர் இருந்தும் ஜெயலலிதாவால் அன்று முதல்வராக அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ்தான். அப்படிப்பட்டவரை இன்று கட்சியினர் ஓரங்கட்டுவது ஏன்? ஓவர் டேக் செய்து எடப்பாடி ஓடிக்கொண்டிருப்பது எப்படி? என்கிற கேள்வி அதிமுகவினரிடையே மட்டுமல்லாது பொதுமக்கள் இடையேயும் எழுந்திருக்கிறது.
சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ் சசிகலாவையே ஆதரித்தது, டிடிவி தினகரனை ரகசியமாக சென்று சந்தித்தது எல்லாம் தர்மயுத்தத்தில் உடன் நின்றவர்களுக்கு அதிருப்தியை தந்துவிட்டது. யாருக்கு எதிராக கொடி பிடிக்கிறோமோ அவரையே ஆதரித்தால் என்ன நியாயம்? எங்களை எல்லாம் தர்மயுத்தத்தில் இறக்கி விட்டுவிட்டு டிடிவி தினகரனை ரகசியமாக சென்று சந்தித்தால் என்ன அர்த்தம்? நாங்கள் எல்லாம் முட்டாள்களா?என்று வெடித்துதான் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் அன்றைக்கே எடப்பாடி பக்கம் சாய்ந்துவிட்டார்கள்.
அப்புறம், தனக்காக தன் பதவிக்காக தர்மயுத்தம் வரைக்கும் போன ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களுக்காக அவர்களின் நலனுக்காக பெரிதாக எதையுமே செய்யவில்லை. அதே நேரம் எடப்பாடி தனது ஆதரவாளர்களுக்கு எப்போதும் துணைநிற்கிறார். இதை எல்லாம் பார்த்துதான் ஓபிஎஸ் பக்கம் நின்ற கூட்டம் மெல்ல மெல்ல எடப்பாடி பக்கம் சென்றது என்கிறார்கள் .
ஒற்றைத்தலைமை ஓபிஎஸ்க்கு போனால், அவர் உடனே சசிகலாவை அதிமுகவிற்குள் உள்ளே கொண்டு வந்துவிடுவார். அப்புறம் சசிகலாவின் காலில் விழுந்து கிடக்க வேண்டியதுதான். அந்த நிலைமை இப்போதுதான் மாறியிருக்கிறது. எந்த நேரமும் அஞ்சி நடுங்கிக் கொண்டு இருக்காமல் அதிகாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். சசிகலா உள்ளே வந்துவிட்டால் அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் கும்பிடு போடுவதிலும் கப்பம் கட்டுவதிலுமே காலம் போய்விடும். வருவாயும் போய்விடும். அப்புறம் எங்கே நாம் செல்வத்துடன், செல்வாக்குடன் நடமாட முடியும்? என்பதை எல்லாம் கணக்கு போட்டுத்தான் சீனியர்கள் பலரும் எடப்பாடி பக்கம் சாய்ந்துவிட்டார்கள் என்கிறது அதிமுக ஜுனியர் வட்டாரம்.
தனக்கும் தன் வாரிசுக்கும் பதவி பெறுவதிலேயே குறிக்கோளாக இருக்கும் ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களுக்கு முக்கிய பதவிகளை பெற்றுத்தருவதில் அவ்வளவாக அக்கறை காட்டுவதில்லை. இதனால்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தும் கூட கட்சினரை தன் பக்கம் ஒருங்கிணைக்க முடியவில்லை ஓ.பன்னீர்செல்வத்தினால். கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் கூட, முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சி தலைவர் என்று எடுத்த முடிவில் உறுதியாக நின்று சாதித்து காட்டுகிறார் எடப்பாடி. தன்னை நம்பி வந்தவர்களுக்கு போராடி பதவிகளை பெற்றுத்தருகிறார் என்பன போன்றவற்றால் கட்சியினர் எல்லோரையும் தன் வசம் ஈர்த்திருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள்.
முதல்வர் வேட்பாளராக இருந்து அதிமுகவின் அத்துனை வேட்பாளர்களுக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்து அவர்களை எல்லாம் தன் பக்கம் ஈர்த்தார் எடப்பாடி. முதல்வர் வேட்பாளர் தான் இல்லை என்பதற்காகவே பிரச்சாரத்திற்கே புறப்படாமல் வெகுநாட்களை கடத்தினார் ஓபிஎஸ். முதல்வர் வேட்பாளர் என்பதை கணக்கில் வைக்காமல் வேட்பாளர்களை கவனத்தில் கொண்டு அவர்களுக்காக உழைத்திருந்தால் இன்றைக்கு அவர்கள் ஓபிஎஸ் பக்கம் நின்றிருப்பார்கள். இப்படி நிறைய விசயத்தில் சறுக்கிவிட்டார் ஓபிஎஸ் என்கிறார்கள் அதிமுகவினர்.
ஒற்றைத்தலைமை விவகாரத்திலும் எடப்பாடியின் கைதான் ஓங்கியிருக்கிறது. அவரின் ஒற்றைத்தலைமயின் கீழ்தான் இனி அதிமுக இயங்கப்போகிறது என்கிற முடிவுக்கு கட்சியினர் மட்டத்தில் இப்போதே அல்ல எப்போதே பேச்சு வந்துவிட்டது என்கிறார்கள்.