கனவில் கூட கழுதையையும், பன்றியையும் மேய்க்க முடியாதவர்கள்.. கடுப்பான பாஜக
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜகவுக்கு பரவலான வெற்றி கிடைத்திருக்கிறது. 21 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை மாநகராட்சியில் மீண்டும் தடம் பதித்திருக்கிறது. இதையடுத்து தமிழகத்தில் பாஜக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறது என்ற பேச்சு எழுந்திருக்கிறது.
மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்திருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சொல்லி வருகிறார். இதனால், ‘’இது அடிப்படை ஆதாரமற்ற கருத்து’’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடுப்பாகி பேசியிருக்கிறார்.
அவர் மேலும், ‘’சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் போட்டியிட்டு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் 16 இடங்களில் போட்டியிட்டு 13 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை விட பெரிய கட்சி என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்கமுடியாதது. காங்கிரஸ் கட்சி உறுதியாக நிதானமாக கொள்கை ரீதியாக படிப்படியாக வளர்ந்து கொண்டிருக்கிறது. கொள்கை இல்லாதவர்கள், வன்முறையில் நாட்டம் உள்ளவர்கள், வெறுப்பு பேச்சு பேசக்கூடியவர்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம். ’’ என்கிறார்.
தமிழ்நாட்டின் 3வது பெரிய கட்சி காங்கிரஸ்தான், பாஜக அல்ல; 2024 மக்களவை தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு தனது செல்வாக்கை நிரூபிக்கட்டும். தனித்து போட்டியிடுமா? என்பதை அண்ணாமலை தெளிவாகக் கூற வேண்டும் என்றும் அழகிரி தெரிவித்திருக்கிறார்.
மேலும், பாஜக வால் கனவில் தான் குதிரை ஓட்ட முடியும் என்றும் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். இதற்கு தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ’’கனவில் கூட கழுதையையும், பன்றியையும் மேய்க்க முடியாதவர்கள் குதிரை ஓட்டுவது குறித்து விமர்சனம் செய்வதா?’’என்ற கடுமையாக சாடியிருக்கிறார்.