இரவு முழுவதும் மிரட்டல் அழைப்புகள்... அந்தோணி மகன் ராஜினாமா பின்னணி
பிரதமர் மோடி குறித்து பிபிசி ஆவணப்பட சர்ச்சையினால் காங்கிரஸ் மூத்த தலைவர் அந்தோணி மகன் அணில் அந்தோணி ராஜினாமா செய்துள்ளார். கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்திருக்கிறார். பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பினால் அவர் தனது பொறுப்புகளில் இருந்து விலகி இருக்கிறார்.
பிபிசி நிறுவனம் கடந்த 2002 ஆம் ஆண்டில் குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த ஆவணப் படத்தில் அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை தொடர்பு படுத்தி இருக்கிறது. இதனால் இந்த படத்தை வெளியிட மத்திய அரசு தடை விதித்தது.
இப்படத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ. கே. அந்தோணியின் மகன் அனில் அந்தோணியும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டு இருந்த அறிக்கையில், பாஜகவுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட நான் நினைப்பது என்னவென்றால், பிரிட்டன் அரசு சார்பில் நடத்தப்படும் பிபிசி சேனல் இந்தியர்களை பற்றி நீண்ட காலமாக தவறான எண்ணம் கொண்டிருக்கிறது. அந்த சேனலில் ஈராக் போருக்கு மூளையாக இருந்த பிரிட்டன் முன்னாள் உள்துறை அமைச்சர் ஜேக் ஸ்டராவின் கருத்தை, இந்திய நிறுவனங்கள் மீது பதிப்பது ஆபத்தான முன்னுதாரணம். இது நம் இறையாண்மையை குறைத்து மதிப்பிடுவதாகும் என்று கூறியிருந்தார்.
இதனால் அணில் அந்தோணிக்கு காங்கிரஸ் கட்சிக்குள் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இரவு முழுவதும் மிரட்டல் அழைப்புகளும் வெறுப்பு செய்திகளும் வந்திருக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் குறிப்பிட்ட பிரிவினரிடமிருந்து வந்த பேச்சுக்கள் அவரை காயப்படுத்தி இருக்கின்றன. இதனால் அவர் காங்கிரஸின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், கேரள காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியில் எனக்கு அளிக்கப்பட்ட பதவியில் இருந்து விலகுகிறேன். நான் பதிவிட்ட கருத்துக்கு பேச்சு சுதந்திரத்திற்கு போராடுபவர்களால் சகிப்புத்தன்மையற்ற அழைப்புகள் எனக்கு வந்தன. அதனால் ராஜினாமா செய்தேன். நடந்த சம்பவங்களை கருத்தில் கொண்டு கட்சியில் இருக்கும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவது சரியானது என்று நான் நினைக்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.