பாலியல் புகாரில் சிக்கிய திருச்சி சிவா, பெரிய கருப்பனுக்கு பதவி கொடுத்து அழகு பார்க்கிறார்கள்; பொள்ளாச்சிக்கு மட்டும் குதிக்கிறார்கள்- சூர்யா சிவா விளாசல்
திமுகவின் மூத்த தலைவர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பாஜகவில் இணைந்து அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக உள்ளார். பாஜகவில் இணைந்து விட்டதால் திருச்சி சிவாவின் மகன் என்கிற அடையாளத்தையே அழித்துவிட்டேன் என்கிறார் சூர்யா சிவா. திமுகவில் இருந்து இவர் பாஜகவிற்கு சென்றிருப்பதால் பாஜக பிள்ளை பிடிக்கும் வேலையை செய்து வருகிறது என்று விமர்சனம் செய்திருக்கிறார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி.
திமுகவிலிருந்து தான் ஏன் பாஜகவிற்கு சென்றேன் என்பது குறித்தும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கும் சூர்யா சிவா தற்போதும் அது குறித்து சொல்லி இருக்கிறார்.
தந்தை மீதான பாலியல் குற்றச்சாட்டினையே எடுத்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
உதயநிதி, சபரீசன், கனிமொழி என்கிற முக்கோணத்துக்குள் சிக்கித் தவிக்கிறது திமுகவின் அதிகார மையம். கனிமொழி ஓர் அணியாகவும், சபரீசன் ஒரு அணியாகவும், இதை தவிர்த்து அன்பில் மகேஷ் போன்றவர்கள் வழியாக உதயநிதி ஒரு அணியை உருவாக்கி அரசியல் செய்து வருகின்றார்கள். மொத்தத்தில் திமுக திக்கு முக்காடி கொண்டிருக்கிறது. இதையெல்லாம் ஸ்டாலினால் சமாளிக்க முடியவில்லை. இதனால் கட்சியினர் அதிருப்தியில் இருக்கிறார்கள். தேமுதிகவின் அழிவுக்கும் அதிமுகவின் தோல்விக்கும் கட்சியினர் மத்தியில் உருவான அதிர்ச்சி தான் காரணம். திமுகவும் தோல்வியை சந்திக்கும் என்கிறார் சூர்யா சிவா.
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் வெளியான போது திமுகவினர் குதித்தார்கள். ஆனால் தங்கள் கட்சியினர் மீதான பாலியல் புகார்களுக்கு இது வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகைய புகாரில் சிக்கிய திருச்சி சிவா, பெரிய கருப்பன் போன்றவருக்கு பதவி கொடுத்து அழகு பார்க்கிறார்கள்.
பாஜகவிலும் பலர் மீது பாலியல் புகார்கள் உள்ளன. ஆனால் பாலியல் புகாருக்கு உள்ளானவர்களை கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். எந்த அதிகாரமும் இல்லாமல் டம்மியாக வைத்திருக்கிறார்கள் என்று சொல்லி தந்தை மீது தந்தை மீதான பாலியல் வழக்கையே எடுத்துச் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார்.
அமைச்சர் கே. என். நேருவுக்கும் என் அப்பாவுக்கும் இடையேயான சண்டை தான் திமுகவில் எந்த பொறுப்பையும் என்னால் பெற முடியவில்லை. நான் கிறிஸ்தவ பெண்ணை மணந்ததால் என்னிடம் பேசுவதையே அப்பா நிறுத்திவிட்டார் . நான் மதம் மாறி திருமணம் செய்து கொண்டதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை . இப்படி இரட்டை வேடம் போடுபவர்கள் இடம் என்னால் நீடிக்க முடியாது. அதனால் திருச்சி சிவா மகனின் என்கிற அடையாளத்தை அழித்துவிட்டு நான் பாஜகவுக்கு செல்கிறேன் என்றதும் திமுக முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜ் மகன் கருணை ராஜா என்னையும் அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்னார். நான் முதலில் செல்கிறேன் பிறகு உன்னை அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன். திமுகவிலிருந்து பாஜகவில் இணைவர்கள் எண்ணிக்கை இனி அதிகரிக்கும் என்று அதிர வைத்திருக்கிறார்.