ரஜினியை பாஜக தலைவர்கள் விட தயாராக இல்லை; அவரை ஒரு கருவியாக பயன்படுத்த நினைக்கின்றனர்- திருமா
ஆளுநர் மாளிகை ஆர்எஸ்எஸ் மையமாக செயல்பட்டு வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தற்கொலை அல்ல கொலை என மாணவியின் பெற்றோர்கள் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.அமைதியான முறையில் 5 நாட்கள் போராட்டம் நடைபெற்றது.5 நாட்களுக்கு பிறகு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள், அது வன்முறையாக மாறியது.இது குறித்து விசாரிக்க சி.பி.சி.ஐ. டி விசாரணை மற்றும் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளியில் நடந்த வன்முறை எப்படி நடந்தது என்று திசை மாறி சென்று கொண்டிருக்கிறது.
மாணவியின் உயிரை விட பள்ளியின் நடந்த தாக்குதல் பற்றி பேசப்படுகிறது. தமிழக அரசு நியமித்த சிறப்பு புலனாய்வு குழு வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்கிறோம் என்று சம்பந்தம் இல்லாதவர்கள் மீது வேட்டையாடிக் கொண்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. புவியரசு, வசந்த் ஆகிய இளைஞர்கள் போட்டி தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். தலித் மாணவர்களாகிய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட ஜாதியினரை மட்டும் ஜாதி பெயர் கேட்டு கைது செய்யும் நடவடிக்கையில் புலனாய்வுக்குழு ஈடுபட்டு வருகிறது. இது அதிர்ச்சி அளிக்கிறது.
ஸ்ரீ மதியின் சாவுக்கு காரணம் குறித்து விசாரணை நடைபெற வேண்டும்.தொடர்பு இல்லாதவர்களைத் கைது செய்வதை கைவிட வேண்டும். சாதியின் பெயரால் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட சாதியினர், தலித் இளைஞர்களை தேடிப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைப்பதாக கிடைத்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. குறிஞ்சாகுளத்தில் அமைதி திரும்பவில்லை. காவல்துறையினரின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை தலித் மக்களைத் துன்புறுத்துகிறது.
ரஜினிகாந்த் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். அவரை ஒரு கருவியாக வைத்து காலூன்ற நினைக்கிறார்கள். ரஜினிகாந்தை பாஜக தலைவர்கள் விட தயாராக இல்லை . ஆர்.என் ரவி என சொல்வதை விட ஆர்.எஸ்.எஸ் ரவி என சொல்லலாம். ராஜ்பவன் ஆர்எஸ்எஸ் மையமாக விளங்குகிறது. பிரிவினைவாத அரசியலை வலுப்படுத்தும் வேலைகளை ஆளுநர் செய்து வருகிறார். ரஜினி ஆர்.எஸ்.எஸால் டார்கெட் செய்யப்பட்டு வருகிறார்.பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும் என்கிற கூக்குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்க வேண்டும்” எனக் கூறினார்.