“விஜயகாந்த் சொத்தை விற்று கட்சியை நடத்திவருகிறார்;கூட்டணி பேரம் பேசியதை நிரூபித்தால் கட்சியை கலைக்க தயார்”
குடும்பம் இல்லாததால் தான் அதிமுகவில் நான் பெரிசா, நீ பெரிசா சண்டையிட்டு திண்டாடி வருவதாகவும், தேமுதிக மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்கு பேரம் பேசியதை நிரூபித்தால் கட்சியை கலைக்க தயார் என்றும் மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பனம்பட்டியில் தேமுதிக கடவூர் வடக்கு ஒன்றிய அமைத்தலைவர் கதிர்வேல் இல்ல காதணி விழாவில் மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேமுதிக கட்சி ஆனது ஒரு குடும்ப கட்சி. திமுகவை கலைஞருக்குப் பிறகு அவரது மகன் ஸ்டாலின், பேரன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியினை சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர். அதுபோலத்தான் தேமுதிக கட்சியை தனது தாயார் பிரேமலதா, மாமா சுதீஷ் மற்றும் நானும் கட்சிக்காக உழைத்து வருகிறோம். குடும்பம் இல்லாததால் தான் அதிமுகவில் தற்போது நான் பெரிதா? நீ பெரிதா? என்று போட்டி நிலவி திண்டாடி வருகிறது. தேமுதிக கட்சியை சுற்றி தான் அரசியல் நகர்வுகள் நடைபெறுகிறது. விஜயகாந்த் கட்சிக்காக தனது சொந்த சொத்தை விற்று கட்சியை வழி நடத்தி வருக்கிறார்.
கட்சி ஆரம்பிப்பதற்கு முன் எவ்வளவு சொத்துக்கள் இருந்தது, தற்போது எவ்வளவு சொத்துக்கள் என்பது உள்ளது என்பதை வெளிப்படையாக கூற தயார். கடந்த கால தேர்தல்களில் தேமுதிக மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்காக பேரம் பேசியதாக பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். கூட்டணி பேரம் பேசுவது எங்கள் நோக்கமில்லை. அதனை நிரூபித்தால் கட்சியினை கலைத்து விடுகிறேன். வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக தலைமையான கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும், நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் அயராது பாடுபட வேண்டும்” எனக் கூறிவருகிறார்.