அவ்வளவு ஆட்களுக்கும் அவ்வளவு பணத்திற்கும் நான் எங்கே போவேன்..சரவணனை புலம்ப வைத்த பிடிஆர்
பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் விதித்துள்ள நிபந்தனையால் ஆடிப் போயிருக்கிறார் டாக்டர் சரவணன். மதிமுக, திமுக, அதிமுக, அமமுக, பாஜக என்று கட்சி விட்டு கட்சி தாவியதற்கு சரியான செக் வைத்திருக்கிறார் பிடிஆர் என்கின்றனர் மதுரை திமுகவினர்.
செருப்பு வீச்சு சம்பவத்திற்கு பின்னர் எளிதாக திமுகவில் இணைந்து விடலாம் என்று நினைத்திருந்த டாக்டர் சரவணன் இப்படி ஒரு சிக்கல் வரும் என்று நினைக்காததால் ஆதரவாளர்களிடம் புலம்பி வருகிறாராம்.
செருப்பு வீச்சு சம்பவத்திற்கு பின்னர் அன்று இரவே பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து மன்னிப்பு கேட்டு விட்டு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் டாக்டர் சரவணன். அது மட்டுமல்லாமல் அன்றிலிருந்து பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார். இதன் மூலம் தான் மீண்டும் திமுகவில் இணைந்து விடலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் அவரின் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டு இருக்கிறார் பி டி ஆர்.
நீங்கள் மட்டும் தாய் கழகத்திற்கு திரும்பி வந்தால் போதாது. பாஜகவில் உங்களைப் போல் இருக்கும் தென் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் தொண்டர்கள் என்று பத்தாயிரம் பேர் உங்கள் தலைமையில் அழைத்து வந்தால் தான் திமுகவில் உங்களுக்கு இடம் தரப்படும் என்று கண்டிப்பாக சொல்லி இருக்கிறார். பாஜக நிர்வாகிகளை, தொண்டர்களை திமுக பக்கம் இழுப்பதற்கு ஆகும் செலவு மொத்தத்தையும் நீங்கள்தான் செய்தாக வேண்டும் என்றும் கூடுதல் நிபந்தனை விதித்திருக்கிறார் பிடிஆர்.
இதனால் ஆடிப் போன டாக்டர் சரவணன், அவ்வளவு ஆட்களுக்கும் அவ்வளவு பணத்திற்கும் நான் எங்கே போவேன் என்று தனது ஆதரவாளர்களிடம் புலம்பி வருகிறாராம் . அடிக்கடி கட்சி மாறும் டாக்டர் சரவணன் அவர்களுக்கு இது சரியான பாடம் என்று மதுரை திமுகவினர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.