காஞ்சிபுரத்தின் முதல் மேயர் இவரா?
அதிகம் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருப்பது சென்னை மேயர் யார் என்பதுதான். அதற்கு அடுத்தபடியாக இருப்பது காஞ்சிபுரம் மேயர் யார் என்பதுதான்.
முதல் பெண் மேயர் என்பதால் அதுவும் பட்டியலில் பெண் மேயர் என்பதால் சென்னை மேயர் பதவி அதிகம் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயர் யார் என்கிற எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகளின்படி காஞ்சிபுரம் மாவட்டம் திமுக கோட்டையாக மாறி இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிக வெற்றி கிடைக்கும் என்று நம்பி, அதற்கு ஏற்ற பலம் வாய்ந்த வேட்பாளர்களையே தேடித்தேடி நிறுத்தியிருக்கிறது திமுக.
காஞ்சிபுரம் மாநகராட்சி அந்தஸ்தை பெற்றிருக்கும் நிலையில் முதல் மேயர் தேர்தலை சந்திக்கிறது. மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் பெரும்பான்மை பெறும் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் மேயராக முடியும். அந்த வகையில் காஞ்சிபுரத்தின் முதல் மேயர் யார்? என்கிற எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே இருக்கிறது.
மேயர்பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் ஏகப்பட்ட திமுகவினர் குடும்ப உறுப்பினர்களை நிறுத்தி அவர்கள் வெற்றி பெற பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயர் யார் என்ற ஆர்வம் நாளுக்கு நாள் கட்சியினரிடையே மட்டுமல்லாமல் மக்களிடையேயும் அதிகரித்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேயர் பொறுப்புக்கு யார் என்பதை சிபாரிசு செய்து கட்சியின் நிர்வாகிகள் ஆளாளுக்கு ஒரு லிஸ்ட் கொடுத்திருக்கிறார்களாம்.
தலைமை அதில் டிக் அடிக்கப்போகும் பெயர் இவரா? அவரா? என்று கட்சியினரிடையே சலசலப்பு எழுந்திருக்கிறது.