உண்மை முகத்தை மக்களிடம் தெரிவிப்பீர்களா ஸ்டாலின் அவர்களே? பாஜக
இனியாவது சமூக நீதி என்ற பெயரில் செய்து வந்த, செய்து கொண்டிருக்கிற மலிவு அரசியலை கைவிட்டு மக்கள் நலனில் உண்மையான அக்கறையோடு செயல்படுவீர்களா? உண்மையிலேயே சமூக நீதியின் மீது அக்கறையிருந்தால் காங்கிரஸ் கட்சியின் உண்மை முகத்தை மக்களிடம் தெரிவிப்பீர்களா ஸ்டாலின் அவர்களே? என்ற கேள்வியை எழுப்புகிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.
அவர் மேலும் தனது அறிக்கையில், "சமூக நீதியை நிலைநாட்ட, மேம்படுத்த, நாம் எந்த நம்பிக்கையோடும், நோக்கத்தோடு மண்டல் ஆணையத்தை நிறுவினோமோ அதே நோக்கத்தோடு இணைய வேண்டும்" என்று சமூக நீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப்பு என்ற அமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் உள்ளிட்ட 37 கட்சிகளின் கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின்.
"மண்டல் ஆணைய அறிவிப்பு வந்தவுடன், சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது, பெருளாதார அடிப்படையில் தான் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜிவ் காந்தி உள்ளிட்ட பெருந்தலைகள் முழங்கின. அதன் பிறகு பீகாரில் - டெல்லியிலும் - மற்றும் சில மாநிலங்களிலும் உயர் சாதி மக்கள் மண்டல் பரிந்துரைகளை எதிர்த்து கிளர்ச்சி என்ற பேரால் காலித்தனம் நடத்தினார்கள்.
மண்டல் பரிந்துரையை எதிர்த்து நடத்தப்பட்ட காலித்தனத்தை காங்கிரஸ் ஆதரித்தது. தூண்டி விட்டது. துணை நின்றது.
28.9.90 தேதியிட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு இந்திரா காங்கிரஸ் தான் மண்டல் பரிந்துரைகளை எதிரான காலித்தனத்தை பின்னாலிருந்து இயக்குகிறது என்பதை ஆதாரப்படுத்தும் செய்தி ஒன்றினை 'The hand that guides the agitation' என்ற தலைப்பிட்டு வெளியிட்டிருந்தது.
அதன் படி,
1. இந்திரா காங்கிரசின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மாணவர்களை தூண்டிவிட்டு இந்த கிளர்ச்சியை வலுப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.
2. இட ஒதுக்கீட்டிற்கு எதிரான இந்த கிளர்ச்சிக்கு தலைமை தாங்கி நிதியுதவி அளிப்பது காங்கிரஸ் தான்.
3. வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்க்க இந்தக் கிளர்ச்சி பெரிதும் உதவியாக இருக்கும் என்பது காங்கிரசின் திட்டம்.
4. இட ஒதுக்கீட்டுக் கிளர்ச்சிக்கு ஆதரவாக டில்லியின் சுவர்களிலும், கார்களிலும் "என்னை குறை கூறாதீர்கள், நான் வி.பி,சிங்கிற்கு ஓட்டுப் போடவில்லை" என்ற வாசகத்துடன் கூடிய போஸ்டர்களும், ஸ்டிக்கர்களும் ராஜிவ் காந்தியின் விளம்பர ஆலோசகரால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டவை.
5.இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களின் தலைமை அலுவலகம் தெற்கு டில்லியில் சப்தர்ஜங் மேம்பாலம் அருகேயுள்ள 'ஏரோ கிளப்' வளாகத்தில் இயங்கி வந்தது. அந்த இடம் ராஜிவ் காந்தியின் நெருங்கிய நண்பர் சதீஷ் சர்மா எம்.பி.யின் ஆளுகைக்கு உட்பட்ட இடமாகும்.
6. இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களின் இன்னொரு அலுவலகம் 'ஏரோ கிளப்' அருகிலேயே உள்ள லட்சுமிபாய் நகரில் உள்ள தொழிற்பட்டறை. இது சஞ்சய் காந்தியின் ஆப்த நண்பர். 1984ல் இந்திரா காந்தின் சுடப்பட்ட அன்று சீக்கிய மக்களை இந்திரா காங்கிரசார் கொன்று குவித்தார்கள் அல்லவா? அதனையொட்டி சீக்கிய தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில் இடம் பெற்றார் அர்ஜுன்தாஸ். இவரை சீக்கிய தீவிரவாதிகள் கொன்று விட்டார்கள்.
அர்ஜுன்தாஸின் சகோதரர் அசோக் அஹிஜா, டெல்லியின் பெரிய ரவுடி கும்பலுக்கு தலைவியார். இந்திரா காங்கிரசின் தளபதி. இந்த அசோக் அஹிஜா தான் தெற்கு டெல்லியின் பல பகுதிகளுக்கும் சென்று இட ஒதுக்கீட்டு எதிர்ப்பு கலவரத்தில் மாணவர்களை போலீசை தாக்கும்படி ஊக்குவித்த நபர்.
7. இந்திரா காங்கிரஸ் எம்,பி ஹரிஷ் ராவட் கலவரம் நடந்த பகுதிகளில் கலவரக்காரர்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கி ஊக்குவித்திருக்கிறார்.
8. அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவன மருத்துவமனை அருகே உயர்சாதி மாணவர்கள் சாலையை மறித்து இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது அங்கே ராஜீவின் நெருங்கிய நண்பரும், மாநிலங்களவை இந்திரா காங்கிரஸ் உறுப்பினருமான எஸ்.எஸ். அலுவாலியா திறந்த ஜீப்பில் ஏறி நின்று கொண்டு மாணவர்கள் மத்தியில் சுற்றி சுற்றி வந்து அவர்களை இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உற்சாகப்படுத்தினார்.
9. கே,கே.திவாரி, ராஜிவ் காந்தி அரசின் மந்திரி,
டெல்லி பல்கலை கழகத்தின் கிராந்தி சௌக்கில் மண்டல் கமிஷன் அமலை எதிர்த்து மாணவர் பேரணிகளையே நடத்தினார்.
10. டில்லியில் நடந்த காலித்தனங்களுக்கு தலைமை வகித்து நடத்திய அமைப்பின் தலைவராக இருந்தது ஹரிசிங். இவர் தான் காங்கிரஸின் மாணவர் அமைப்பான நேஷனல் ஸ்டுடண்ட்ஸ் யூனியன் ஆஃப் இந்தியாவின் முன்னாள் நிர்வாகி.
11.உத்திரப்பிரதேசத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான காலித்தனங்களுக்கு தலைமை வகித்தவர்கள் இருவர். ஒருவர், காங்கிரஸ் மந்திரியாக இருந்த அருண்குமார் சிங். இன்னொருவர் போலா பாண்டே. 1977ல் இந்திரா காந்தி கைது செய்யப்பட்ட போது விமானத்தையே கடத்தியவர் -
அனைத்திற்கும் மேலாக மண்டல் பரிந்துரையை வாபஸ் பெற்றே ஆக வேண்டும் என் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தது காங்கிரஸ் தலைவர் வசந்த் சாத்தே" - இப்படி மண்டல் ஆணையத்திற்கு எதிராக, இட ஒதுக்கீட்டிற்கு எதிராக , சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு இந்த நாட்டையே பிளந்து சுடுகாடாக்கிட துடித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு சமூகநீதி கூட்டமைப்புக்காக கடிதம் எழுதியுள்ளீர்களே, இது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தி மு க இழைக்கும் அநீதி இல்லையா ஸ்டாலின் அவர்களே?
நீங்கள் கடிதம் எழுதியுள்ள 37 தலைவர்களில் பெரும்பான்மையானோர் அந்த நேரத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள் தான், அவர்களை கூட்டமைப்புக்கு அழைப்பது சமூக நீதிக்கு நீங்கள் இழைக்கும் துரோகம் என்று உணரவில்லையா ஸ்டாலின் அவர்களே?
இனியாவது சமூக நீதி என்ற பெயரில் செய்து வந்த, செய்து கொண்டிருக்கிற மலிவு அரசியலை கைவிட்டு மக்கள் நலனில் உண்மையான அக்கறையோடு செயல்படுவீர்களா? உண்மையிலேயே சமூக நீதியின் மீது அக்கறையிருந்தால் காங்கிரஸ் கட்சியின் உண்மை முகத்தை மக்களிடம் தெரிவிப்பீர்களா ஸ்டாலின் அவர்களே?
நான் மேலே குறிப்பிட்டுள்ள அத்துனை விவரங்களையும் உங்களால் மறுக்க முடியுமா மு.க,ஸ்டாலின் அவர்களே? நான் உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவிட்டதாக உங்களால் குற்றம் சாட்ட முடியுமா ஸ்டாலின் அவர்களே? முடியாது! ஏனென்றால், மேலே குறிப்பிட்டவை அனைத்தும் 'உங்கள் முரசொலியில்' 18/11/1990 அன்று பிரசுரிக்கப்பட்டவை!’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.