“என் ஜாதி எனக்கே தெரியாது; உரிமையைக் கேட்டால் சங்கி என்கிறார்கள்”- ஆதவ் அர்ஜுனா

 
ஆதவ் அர்ஜூனா

திருமாவளவனுடைய கனவுகள் கூடிய விரைவில் நிறைவேறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். 

adhav

தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “தற்போது தொலைக்காட்சிகளில் என் ஜாதிப் பெயரை சொல்லிப் பேசுகிறார்கள், எனக்கே என்னுடைய ஜாதி தெரியாது. அதனால்தான் திருமாவளவனுடன் இருக்கிறேன். இது பெரியார் அம்பேத்கருடைய இயக்கம். எம்.எல்.ஏ, எம்.பி ஆக நான் வரவில்லை. ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு பிரச்சாரத்தை உருவாக்கதான் இங்கு வந்தேன். திருமாவளவனின் வலியுறுத்தலில் வந்திருக்கிறேன். 

கொள்கைக் கூட்டணி, அதிகாரக் கூட்டணி என்று சொல்வார்கள். அப்படியென்றால் அதிகாரத்தை தலித்திடம் கொடுங்கள். ஒருத்தர் மட்டும் ஆள்வதற்குப் பிறக்கவில்லை. எங்களுக்கான அரசியல் பிரசாரத்தை உருவாக்க தெரியும். திருமாவளவனுடைய கனவுகள் கூடிய விரைவில் நிறைவேறும். எல்லா விதமான அதிகாரமும் சட்டமன்றத் தேர்தலில் நிறைவேற்றப்படும். தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினால் வன்முறையாளர்கள் என்றும் சிறுபான்மையின மக்கள் உரிமைகளை கேட்கப்படும்போது தீவிரவாதிகள் என்றும் சொல்பவர்கள், இப்போது உரிமையைக் கேட்டால் சங்கி என்கிறார்கள். வரக்கூடிய சட்டமன்ற பட்ஜெட்டில் தலித் குடியிருப்புப் பகுதிகளுக்கென தனியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனக் கூறினார்.