நடிகர்களை அணிதிரட்டும் அமீர்,வெற்றிமாறன்! கேரளாவுக்கு எதிரான போராட்டம்!

 
av

காவிரி பிரச்சனையில் தமிழ் திரையுலகம் அணி திரண்டது போல் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்திலும் அணி  திரள்கிறது.  அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள திரையுலகம் களம் இறங்கியிருக்கும் போது  அணைக்கு ஆதரவு தெரிவித்து  தமிழ் திரையுலகம் களமிறங்க இருக்கிறது. இயக்குனர்கள் அமீர் மற்றும் வெற்றிமாறன் இணைந்து நடிகர்களை அணி திரட்டவிருக்கிறார்கள்.  

va

 மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் நீர்ப்பாசனத்திற்கு ஆதாரமாக விளங்கி வருகிறது முல்லைப் பெரியாறு அணை.  தமிழக-கேரள எல்லையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த முல்லை பெரியாறு அணை .  155 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 15.5 டிஎம்சி தண்ணீரை தேக்கிவைக்க முடியும்.   இந்த அணை கேரளாவில் அமைந்திருந்தாலும் அணையின் பராமரிப்பினை தமிழக பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது.  இந்த அணை தமிழ்நாட்டுக்கு சொந்தமானது என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் தமிழ்நாடு நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன்.  ஆனாலும் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கும்- கேரளாவுக்கும் இடையே நீண்டகாலமாகவே பிரச்சினை இருந்து வருகிறது.

 விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடு.  ஆனால் இது பழைய அணை என்பதால் 152 அடி உயரத்திற்கு தண்ணீரை தேக்க அணை உடைந்து இடுக்கி உள்ளிட்ட 5 மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கும் என்பது கேரளாவில் இருக்கும் அச்சம்.   

m

 இந்த சர்ச்சையினால் தமிழ்நாடு -கேரளா இரு மாநிலங்களுக்கு இடையே அடிக்கடி பதற்றமும் சர்ச்சையும் எழுந்து வருகின்றன.   கேரளாவில் மழை வெள்ளம் பெருக்கெடுக்கும் போதெல்லாம் இந்தப் பிரச்சினை அங்கே தலைதூக்கி விடுகிறது.  

 முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது.   இந்த சூழ்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில்,   முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.85 அடியாக இருக்கிறது.   மழையின் தீவிரத்தால் அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்து விடும் என்று அஞ்சப்படுகிறது.   அதனால் முல்லை பெரியாறு அணையில் இருந்து அதிகபட்ச தண்ணீரை கால்வாய் வழியாக வைகை அணைக்கு திறந்து விடுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.   இந்த நிலையில் வழக்கம் போல் கேரளாவில் முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும்.  அது பழமையான அணை.   அந்த அணையால் கேரளாவுக்கு ஆபத்து என்று வழக்கம்போல் அங்கே முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.  அதிலும் இப்போது அதிகம் கவனத்திற்கு உள்ளாகி இருப்பது நடிகர் பிரித்திவிராஜ் போட்ட  ஒரு டுவிட். 

p

கடந்த 24 ஆம் தேதி அன்று அவர் தனது டுவிட்டர்,  உண்மைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் என்னவாக இருந்தாலும் சரி, 125 ஆண்டுகள் பழமையான இந்த அணை ஒரு செயல்பாட்டுக் கட்டமைப்பாக இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. அரசியலையும் பொருளாதாரத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு சரியானதைச் செய்யும் நேரம் இது என்று பதிவிட்டிருந்தது.  இது கேரளாவில் பற்றிக்கொண்டது.   பிரித்விராஜ்  போட்ட அந்த பதிவை தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த பல பிரபலங்களும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான பிரச்சாரத்தில் இணைந்தன கேரளாவில் உள்ள பிரபல நடிகர்கள்பலரும் இந்த பிரச்சாரத்தில் இணைந்தனர்.   இதற்கு எதிராக தமிழகத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  நடிகரின் பிரித்விராஜ்க்கு எதிராக தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்த அவரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

   முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருப்பதாக 142 அடி வரைக்கும் தண்ணீர் தேக்கி வைக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கும் நிலையில் கேரளாவில் எழுந்திருக்கும் அச்சமும் ஆர்ப்பாட்டங்களும் அம்மாநில முதல்வர் கண்டனத்திற்கு ஆளாகி இருக்கிறது.  கேரள முதல்வரே,  முல்லை பெரியாறு அணை குறித்து சமூக வலைத்தளங்கள் மூலமாக பீதியை கிளப்பினல்  சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கண்டித்திருக்கிறார்.

mu

 முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது என்று முல்லைப் பெரியாறு அணையினால் கேரளாவுக்கு ஆபத்து இல்லை என்று நீதிமன்றம் உறுதி செய்த பின்னரும் கூட கேரளாவில் ஏன் இப்படி ஒரு ஆர்ப்பாட்டங்களும் சர்ச்சைகளும் எழுகின்றன என்றால்,  அதற்கு காரணம், முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கேரளாவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சொகுசு விடுதிகளையும் பங்களா கட்டி வைத்திருக்கிறார்கள்.  அவர்களில் சிலர் தங்களின் சுயநலத்திற்காக அணை குறித்த அச்சம் தெரிவித்து வதந்தியை பரப்பி வருகின்றனர் என்று ஒரு கருத்து நிலவுகிறது. 

 இந்நிலையில் கேரளாவில் இப்படி ஒரு நடிகர் துணிந்து குரல் கொடுக்க அவருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் தமிழகத்தில் ஏன் ஒரு நடிகரும் குரல் கொடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

முல்லை பெரியாறு அணைக்கு எதிராக கேரள நடிகர்கள் குரல் கொடுக்க,  முல்லை பெரியாறு அணைக்கு ஆதரவாக தமிழ் கலைஞர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்ற ஆதங்கம் எழுந்திருக்கிறது.   காவிரி பிரச்சனையிலும் முதலில் இயக்குனர்கள் தான் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.  அதைப்போலவே தற்போதும் இயக்குனர்கள் போராட்டத்தை முன்னெடுக்க அதன் பின்னால் நடிகர்களை அணிதிரட்ட முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

m

இயக்குனர்கள் அமீர் மற்றும் வெற்றிமாறன் இணைந்து நடிகர்களை அணிதிரட்டி கேரளாவுக்கு எதிரான, முல்லைப்பெரியாறு அணைக்கு ஆதரவான  போராட்டத்திற்காக நடிகர்களை அணிதிரட்ட இருக்கிறார்கள்.   இதுகுறித்து இயக்குனர் அமீர்,   ‘’ மம்முட்டி, மோகன்லால் ,சுரேஷ்கோபி என கேரள நடிகர்கள் அரசியல் கட்சிகளில் பணியாற்றிக் கொண்டு நடிப்பதை மட்டுமே தொழிலாக வைத்திருக்கிறார்கள்.  ஆனால் தமிழில் நிறைய நடிகர்கள் அரசியல் புரிதல் இல்லாமல் மேடைகளில் மட்டும் அரசியலை பேசுகின்றார்கள்.   கேரளாவில் இவர்களுக்கு இருக்கும் பெரிய வர்த்தகம் பாதிக்கும் என்று நினைத்துதான் தமிழ் நடிகர்கள் முல்லைப் பெரியாறு குறித்து எதுவும் பேசாமல் வாய்மூடி மௌனம் காக்கிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

 அவர் மேலும்,   ‘’ தமிழர்களின் வாழ்வுரிமை பற்றி பேச தயாராக இல்லாமல் ஒரே இரவில் கட்சியை ஆரம்பித்து ஆட்சியை பிடித்து விடும் எண்ணத்தில் மட்டும் இருக்கிறார்கள்.   இவர்கள்தான் தமிழ் நடிகர்கள்’’ என்றும் கடுமையாக தாக்கி இருக்கும்   அமீர்,   ‘’தமிழ் நடிகர்கள் முல்லைப் பெரியாறு குறித்து பேச வேண்டுமென்றால் இயக்குனர்கள் இதற்கான இயக்கத்தை முன்னெடுக்கவேண்டும்.  அதனால் நானும் வெற்றிமாறனும் முல்லைப் பெரியாறு குறித்து விரைவில் அறிக்கை வெளியிட்டு நடிகர்களை அணி திரட்ட இருக்கிறோம்’’ என்று தெரிவித்திருக்கிறார்.