2008 தீவிரவாத தாக்குதல் குறித்து இப்பம்தான் சுயநினைவுக்கு வந்துள்ளார்.. மணிஷ் திவாரியை தாக்கிய ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி
2008ல் நடந்த மும்பை தீவிரவாத தாக்குதல் உடனடியாக பாகிஸ்தான் மீது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும் என்ற மணிஷ் திவாரி கருத்துக்கு, அவர் இப்பம்தான் சுயநினைவுக்கு வந்துள்ளார் என்று காங்கிரஸின் ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிஷ் திவாரி, 10 ப்ளாஷ் பாயிண்ட்ஸ்: 20 ஆண்டுகள் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில், கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா எதிர்கொண்டஒவ்வொரு தேசிய பாதுகாப்பு சவால்கள் குறித்து மணிஷ் திவாரி தனது கருத்தை பதிவு செய்துள்ளார். மணிஷ் திவாரி தனது டிவிட்டர் கணக்கில், அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில், 2008 மும்பை தீவிரவாத தாக்குதலை குறிப்பிட்டு, நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவிப்பதில் எந்த இரக்கமும் காட்டாத நாட்டிடம், கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது பலத்தின் அடையாளம் அல்ல. அது பலவீனத்தின் அடையாளமாகவே கருதப்படும். வார்த்தைகளை விட அதிரடி நடவடிக்கைக்கு ஒரு நேரம் வரும். மும்பை தீவிரவாத தாக்குதல் நடந்த பிறகு அது போன்று செய்திருக்க வேண்டும். எனவே இந்த தாக்குதலுக்கு பின்னர் உடனடியாக பதிலடி கொடுத்திருக்க வேண்டும் என்பது என் கருத்து என்று மணிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி மணிஷ் திவாரி புத்தகம் தொடர்பாக கூறியதாவது: 2008ல் நடைபெற்ற மும்பை தீவிரவாத தாக்குதல் குறித்து இப்போது அவருக்கு சுயநினைவு வந்து விட்டது. ஏன் அவர் அதை பற்றி அப்போது பேசவில்லை? முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் பாகிஸ்தான் பெரிதும் பலவீனமடைந்தது. நமது எல்லை பாதுகாப்பு படையே பாகிஸ்தானை சமாளிக்கும் நிலையில் அந்த அந்நாட்டின் நிலைமை இருந்தது, அப்படியிருக்கையில் 26/11 தாக்குதலுக்காக அவர்களுக்கு எதிராக என்ன செய்ய வேண்டும்?. லடாக்கில் உள்ள நமது பல பகுதிகளை கைப்பற்றியதுடன், அருணாச்சல பிரதேசத்தில் கிராமங்களை கட்டிய சீனா குறித்து மணிஷ் திவாரி அதிக கவனம் (புத்தகத்தில்) செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.