"துரோகிகளுக்கு அதிமுகவில் இடமில்லை"- எடப்பாடி பழனிசாமி
ஒரு அதிமுக தொண்டன் கூட ஓ.பன்னீர்செல்வத்தை மன்னிக்கமாட்டான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஒரத்தநாட்டில் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “திமுகவுடன் கைகோர்த்துக் கொண்டு பினாமி மற்றும் பி டீமாக செயல்படுகிறார் பன்னீர்செல்வம். டிடிவி தினகரன் என்ற துரோகியுடன் பன்னீர்செல்வம் ஒன்றாக சேர்ந்துள்ளார். முதலமைச்சர், ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தந்த கட்சிக்கு பன்னீர் துரோகம் இழைத்தவர். அம்மாவுக்கே துரோகம் இழைத்தவர் பன்னீர். துரோகிகள் பற்றி பேசுவது செத்த பாம்பை அடிப்பதற்கு சமம். எப்போ பார்த்தாலும் தர்மயுத்தம்.. தர்மயுத்தம்; எத்தனை முறை தர்மயுத்தம் பண்ணுவிங்க...
ஓபிஎஸ், வைத்திலிங்கம் போன்ற துரோகிகளுக்கு அதிமுகவில் இடமில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்தவர் ஓபிஎஸ். ஓபிஎஸ், வைத்திலிங்கத்தின் நாடகம் பலிக்காது. ஒரு அதிமுக தொண்டன் கூட ஓ.பன்னீர்செல்வத்தை மன்னிக்கமாட்டான். அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களின் சொத்து, அதிலிருந்து ஒரு செங்கல்லை கூட யாராலும் அசைக்க முடியாது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் திமுக ஊழல் செய்த ரூ.30 ஆயிரம் கோடி கண்டுபிடிக்கப்படும். கஞ்சா ஒழிப்பு 2.0,3.0 என ‘ஓ’ போடும் முதல்வராக மட்டுமே ஸ்டாலின் இருந்துவருகிறார்.
கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். 2024 நாடாளுமன்ற தேர்தலோடு சட்டசபைக்கும் தேர்தல் வரும். எங்கள் மீது பொய் வழக்கு போடும் ஆட்சியாளர்களை விடமாட்டோம். கள்ளச்சாராயம் குறித்து தாம் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தபோதிலும், தமிழக அரசு அதனை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அப்போதே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் 12 உயிர்கள் பலியாகியிருப்பதை தடுத்து இருக்கலாம்.” என்றார்.