ஈபிஎஸ் நடத்திய தர்மயுத்தம் வென்றுள்ளது - கே.பி.முனுசாமி
தர்மம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது, சிலர் தர்மயுத்த போராட்டத்தை உருவாக்கி இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் உண்மையான தர்மத்திற்காக போராடியவர் எடப்பாடி பழனிச்சாமி, அவருடைய போராட்டம் இன்று வெற்றி பெற்றுள்ளது என கேபி முனுசாமி பேட்டி அளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக தேர்தல் பணிமனையில் அதிமுகவின் இடைக்கால பொது செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வந்துள்ளதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் எஸ்பி வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், சிவி.சண்முகம், கே பி முனுசாமி, காமராஜ், கருப்பண்ணன், திண்டுக்கல் சீனிவாசன், ராதாகிருஷ்ணன் அக்ரிகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட வரும் அதிமுக நிர்வாகிகளும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, “உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது, அதிமுக என்ற மாபெரும் இயக்கம் எம்ஜிஆர் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவை காப்பாற்றப்பட்டு 30 ஆண்டு காலம் ஆட்சி பொறுப்பில் இருந்த இயக்கத்திற்கு சோதனை வந்த காலகட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இந்த இயக்கத்தை அளிக்க நினைத்தவர்களையும் இயக்கத்தை முடக்க வேண்டும் என்று நினைத்தவர்களையும் எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தி, சட்டத்தின் வாயிலாக மிகப் பெரிய வெற்றியை தேடித் தந்துள்ளார். அவருக்கு ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வெற்றிக்காக உழைத்த சிவி சண்முகம் உள்ளிட்டவர்களுக்கும் நன்றி, தர்மம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. சிலர் தர்மயுத்த போராட்டத்தை உருவாக்கி இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையான தர்மத்திற்காக போராடியவர் எடப்பாடி பழனிச்சாமி, அவருடைய போராட்டம் இன்று வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் இந்த நாட்டு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ அதேபோல ஜெயலலிதா என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ அனைத்தையும் முழுமையாக நாட்டு மக்களுக்கு செய்து சிறப்பான பணியை எடப்பாடி பழனிச்சாமி ஆற்றுவார்.அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டதை உச்ச நீதிமன்றமே ஏற்றுக் கொண்டுள்ள காலகட்டத்தில் அவர் எவ்வளவு தூரம் இந்த இயக்கத்தை எதிர்த்து அவர் செயல்பட்டு இருப்பார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அதிமுக அளிக்கப்பட வேண்டும் இதோடு முடிவு கட்ட வேண்டும் என்று பல அரசியல் விமர்சகர்கள் கூட கருத்துக்களை கூறினார்கள். இந்த தீர்ப்பின் அடிப்படையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடிய அதிமுக வேட்பாளர் தென்னரசு ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் உறுதியாக வெற்றி பெறுவார். பொதுச் செயலாளர் தேர்வுகள் என்பது கட்சி நடவடிக்கை, பொதுச்செயலாளர் அதிமுக தலைமை கழக நிர்வாகிகளுடன் இணைந்து இந்த கட்சி நடவடிக்கையை முன்னெடுத்து செல்வார் அதன் அடிப்படையில் விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும்” என்று தெரிவித்தார்.