டெல்லியில் முகாமிட்டுள்ள அதிமுக தலைவர்கள்! அமித்ஷாவை சந்திக்க திட்டம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவை பற்றி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாங்கள் தெய்வமாக வணங்கும் அண்ணாவை சிறுமைப்படுத்தும் வகையில் பேசியதை பொறுத்துக் கொள்ளவே முடியாது. பாஜகவால் இங்கு காலூன்றவே முடியாது. எங்களவை வைத்து தான் உங்களுக்கு அடையாளமே கிடைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை இது என் தனிப்பட்ட கருத்து இல்லை, இது கட்சியின் ஒட்டுமொத்த முடிவு என தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, கூட்டணியில் இருப்பதால் அடிமையாக இருக்க முடியாது என்றார்.
இந்த மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக சமூக வலைதளங்களிலோ ஊடகங்களிலோ கூட்டணி மற்றும் பாஜக குறித்து விமர்சிக்க கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து பாஜக - அதிமுக கூட்டணியில் எவ்வித பிரச்னையும் இல்லை என அதிமுக தரப்பிலிருந்து செல்லூர் ராஜூவும், பாஜக மாநில தலைவர் அன்ணாமலையும் அண்மையில் பேட்டியளித்தார்.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன்,கே.பி.முனுசாமி ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அதிமுக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தைக்காக சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம், அமித்ஷாவிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து முறையிட திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.