வைகோ பற்றி மீண்டும் கேள்வி - சமாளித்த திருமா
ஈழப் பிரச்சனையில் தமிழகத் தலைவர்கள் அரசியல் செய்தார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியிருந்தார். விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்பாளர் தன்னிடம் பேசி தமிழக தலைவர்கள் சிலரை கடுமையாக ஒருமையில் திட்டினார் என்று கூறியிருந்தார் திருமா.
வைகோவுமா? வைகோவையுமா? என்ற கேள்விக்கு, பதில் சொல்லாமல் கடந்து போயிருந்தார் திருமா. இது மதிமுகவினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. தமிழ்நாட்டு இளைஞர்களின் இதயச்சுவர்களில் தமிழீழ விடுதலைப் போராட்டமும் பிரபாகரனும் கல்வெட்டாய் பதிந்து இருப்பதற்கு வைகோ தான் காரணம் என்று பல மேடைகளில் திருமாவளவனே சுட்டிக்காட்டி இருக்கிறார். அப்படி சொன்ன திருமா, இப்போது வைகோ மீது புழுதி வாரி சுற்றுவது எந்த நோக்கத்தில்? என்று கொதித்தெழுந்துள்ளனர் மதிமுகவினர்.
இந்த நிலையில், தோள் சீலைப் போராட்டத்தின் 200ஆம் ஆண்டு நிறைவுப் பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய திருமாவளவனை நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்தித்தபோது, வைகோ மீதான விமர்சனம் குறித்த கேள்விக்கு, ‘’இலங்கைத் தமிழர் விவகாரத்தில் வைகோவின் பங்கு மகத்தானது. அதை யாரும் மறுக்க முடியாது’’ என்று சொல்லி சமாளித்தார் .
அவர் மேலும், ’’இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஒவ்வொருவரும் அவர்களின் வலிமைக்கு ஏற்ப ஈழத்தமிழர் பிரச்சனையில் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். ஐயா நெடுமாறன், பல்வேறு பிரிவுகளாக இருக்கின்ற திராவிட கழகங்களின் தலைவர்கள் உட்பட அவரவர் பங்குக்கு அவரவர் வலிமைக்கு ஏற்ப உதவி இருக்கிறார்கள்’’ என்று சமாளித்தார்.
வைகோ, ராமதாஸ், நெடுமாறன், உள்பட பலரும் திருமாவளவன் பேட்டியால் அதிருப்தியில் இருக்கும் நிலையில், அவரவர் பங்குக்கு அவரவர் வலிமைக்கு ஏற்ப உதவி செய்திருக்கிறார்கள் என்று சமாளித்துள்ளார் திருமா.