தனித்து போட்டியா? அண்ணாமலையின் முடிவு இதுதானா?
அதிமுகவுடன் கூட்டணியை தொடர்வதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்று நகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாவட்ட தலைவர்களுடன் சென்னை தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் பாஜக தனித்து போட்டியிட்டால் அதிக ஓட்டுக்கள் நிச்சயம் கிடைக்கும் என்றும், திமுக- அதிமுகவுக்கு அடுத்ததாக பாஜக மூன்றாவது பெரிய கட்சியாக உறுதி செய்யப்படும் என்றும் கட்சியினர் சிலர் ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள். தனித்து போட்டியிடுவது தொடர்பாக அண்மையில் அண்ணாமலை தலைமையில் மூத்த தலைவர்களின் ஆலோசனை நடந்திருக்கிறது.
இந்த நிலையில் சென்னையில் கட்சித் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று நடக்கவிருக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அண்ணாமலை கூட்டணி தொடங்குகிறதா அல்லது தனித்துப்போட்டியா என்பது குறித்து அறிவிக்க இருக்கிறார்.
அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து கட்சியை பலப்படுத்துவதற்காக மாவட்ட வாரியாக சென்று கட்சியை பலப்படுத்துகிறார். இதனால் பாஜக மேலும் திமுக அரசுக்கு எதிராக அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இதனால் பாஜகவின் செல்வாக்கு வளர்ந்து வருவதோடு கட்சியையும் பலப்படுத்தியிருப்பதால் ஓட்டு சதவீதம் அதிகரிக்கும் என்றும் தலைமை கணக்கு போட்டிருக்கிறதாம்.
நயினார் நாகேந்திரன் அதிமுக எம்எல்ஏக்களுக்கு முதுகெலும்பில்லை, ஆண்மை இல்லாதவர்கள் என்று விமர்சித்திருந்ததால், உங்களுக்கு ஆண்மை இருந்தால் தனித்துப் போட்டியிட்டு பாருங்கள் என்று அதிமுகவினர் ஆவேசம் காட்டி வரும் நிலையில், அண்ணாமலை தனித்து போட்டியிடுவதாக அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறது பாஜக வட்டாரம். அதேசமயம் அடுத்து வரும் தேர்தலை கணக்கில் கருத்தில்கொண்டு கூட்டணியில் தொடர்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது என்கிறார்கள்.