"முதல்வர் "அந்த" கேள்வி கேட்டா இப்டி தான் எஸ்கேப் ஆவேன்" - அமைச்சர் அன்பிலின் கலகல பேச்சு... அதிர்ந்த அரங்கம்!
தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இதன் விளைவாக பழைய கட்டுப்பாடுகளை தூசி தட்டி எடுத்திருக்கிறது மாநில அரசு. அரசியல் கூட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. அதேபோல மக்கள் அனைவரும் கோவிட் தடுப்பு முறைமைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இச்சூழலில் சில நாட்களுக்கு முன்னர் உதயநிதி தலைமையில் கோயம்புத்தூரில் திமுக உறுப்பினர் முகாம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அங்கு மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடிப்பது போன்ற கோவிட் முறைமைகள் பின்பற்றப்படவில்லை என எதிர்க்கட்சிகள் கொதித்தன.
"எதிர்க்கட்சிகள் கூட்டம் கூட்டினாலோ அவர்களின் கட்சி தலைவர்களின் நினைவிடத்தில் கூடினால் ஒமைக்ரான் பரவும். வேறு சில கொரோனாக்கள் பரவும். அதனால் ஸ்டாலுனின் காவல் துறை எங்கள் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கும். உதயநிதி ஸ்டாலினுக்காக கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா? ஒருவேளை தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் மட்டும்தான் ஒமைக்ரான் பரவும் என்று திமுக அரசுக்கு உலக மகா நிபுணர்கள் யாராவது சொல்லி இருப்பார்களோ?
இவர்களுக்கு மனசாட்சியும் கிடையாது. மக்களைப் பற்றி கவலையும் கிடையாது” என அமமுக பொதுச்செயலாளர் சரமாரியாக கேள்வியெழுப்பினார். இதையடுத்து அரசு தரப்போ, உதயநிதி தலைமையில் நடந்தது உள் அரங்கில் நடந்த கூட்டம் என சப்பைக்கட்டு கட்டியது. இதனால் பல்வேறு தரப்பினரின் விமர்சனத்துக்குள்ளானது அரசு. இந்நிலையில் கோவை கூட்டத்தை விஞ்சும் அளவிற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்ட கூட்டம் இருந்ததாகக் கூறப்படுகிறது. மயிலாடுதுறையில் திருமண மண்டபம் திறப்பு விழாவில் அரசு தலைமை கொறடா கோவி. செழியன், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் திமுகவினர் உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது விழாவில் பேசிய அன்பில் மகேஷ், "கொரோனா பரவலை தடுக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும் கூட்டம் கூடியுள்ளது. இதுகுறித்து என்னிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நிச்சயமாகக் கேள்வி கேட்பார். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மயிலாடுதுறை மாவட்டம் பின்தங்கியுள்ளதால், அங்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தியதாகக் கூறி, தப்பித்துக் கொள்வேன்” என நகைச்சுவையாக பேசினார். இதனைக் கேட்டு அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது. அவ்வப்போது சுயபகடியும் அவசியம் தானே...