2024, 2026 தேர்தல் சனாதன தேர்தல்! உதயநிதிக்கு சவால் விடுத்த அண்ணாமலை
சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை உதயநிதி ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை உதயநிதி ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆண்டாள் கோயிலில் 30 பிரசுரங்களை படித்துள்ளார், இதுவும் ஒரு வகையான சனாதன தர்மம் தான். இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் அரவணைத்து செல்லக்கூடியது சனாதன தர்மம். உதயநிதிக்கு ஒரு சவால் விடுகிறேன், 2024 மற்றும் 2026 தேர்தல்களை சனாதன தேர்தல்களாக வைத்துக் கொள்ளலாமா? திமுக சனாதனத்தை ஒழிப்போம் என தேர்தலில் பிரச்சாரம் செய்யட்டும், பாஜக சனாதனத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும், மக்கள் யாருக்கு ஓட்டு போடுவார்கள் என பார்க்கலாம்.
கோயிலில் வழிபட்ட நான் கருவறைக்குள் சென்று பூஜை செய்ய வேண்டுமென எதிர்பார்ப்பது தவறு. நான் செய்யும் விவசாயத்தை பூசாரியை செய்யச் சொல்ல முடியாது. பட்டியலினத்தவர், பெண்கள் உள்ளிட்டோர் சில கோயில்களில் பூசாரியாக இருப்பதை சனாதனம் ஏற்கிறது. சனாதன தர்மத்தை ஒழிப்போம் என வாக்குறுதி அளித்து தேர்தலை சந்திக்க திமுக தயாரா? நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காததே சனாதனம் என உதயநிதி கூறுகிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்முவுக்கு திமுகவினர் ஏன் வாக்களிக்கவில்லை?. பழங்குடியினர் பெண்ணை குடியரசுத் தலைவர் இருக்கையில் அமரவைத்ததே சனாதன தர்மம்தான். ஜனாதிபதி தேர்தலில் திமுகவினர் வாக்களித்தது யஸ்வந்த் சின்ஹா என்ற பிரமணருக்குதான்.” என்றார்.