ஒரே வாக்கு பெற்று இந்தியளவில் ட்ரெண்டான பாஜக பிரமுகர்; அண்ணாமலை சொல்லும் விளக்கம்!

 
bjp

ஒரே ஒரு வாக்கு பெற்று டிரெண்டான வேட்பாளர் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9ஆவது வார்டு இடைத்தேர்தலில் கார்த்திக் என்பவர் போட்டியிட்டார். அவர் பாஜக பிரமுகர். திமுக சார்பில் அருள்ராஜ் என்பவரும் அதிமுக சார்பில் வைத்தியலிங்கம் என்பவரும் போட்டியிட்டனர். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் கார்த்திக் ஒரே ஒரு வாக்கு மட்டும் பெற்று படுதோல்வி அடைந்தார். 913 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அருள்ராஜ் வெற்றி பெற்றார்.

annamalai

அவரது குடும்பத்திலேயே 5 நபர்கள் உள்ள நிலையில், அவர் ஒரே ஒரு வாக்கு மட்டும் பெற்றது கடும் விமர்சனத்துக்குள்ளானது. #ஒத்தஓட்டுகார்த்திக் என இணையதளத்தில் ட்ரெண்ட் ஆனார். #singlevotebjp என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்ட் ஆனது. இது குறித்து விளக்கம் அளித்த வேட்பாளர் கார்த்திக், கிடைத்த ஒரு வாக்கையே தான் வெற்றியாக கருதுகிறேன். தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் 4வது வார்டில் தான் ஓட்டு உள்ளது. இணையதளத்தில் விமர்சிக்கப்படுவதால் மன உளைச்சலில் உள்ளேன். நீதிமன்றத்தில் நாடுவேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பாஜக உறுப்பினர் ஒரே ஒரு வாக்கு பெற்றது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். ஒரே ஒரு வாக்கு பெற்ற கார்த்திக் பாஜகவைச் சேர்ந்தவர் தான். அவர் பாஜக இளைஞரணி மாவட்ட துணைத் தலைவராக உள்ளார். அவர் தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிடாமல் சுயேச்சையாக போட்டியிட்டார். பாஜக தொண்டர்கள் தேர்தலில் களம் இறங்குவதை பாஜக வரவேற்கிறது. எதிர்காலத்தில் அவர்களுக்கு சின்னம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.