"ஐயா ஜன.26 சுதந்திர தினம் அல்ல" - முதல்வர் ஸ்டாலினை நக்கல் செய்து அண்ணாமலை கடிதம்!

 
அண்ணாமலை

இந்தியா முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படும். இதையொட்டி டெல்லியில் நடக்கும் விழாவில் நாட்டின் ராணுவ வலிமையை பறைசாற்றும் அணி வகுப்பும், மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக அம்மாநில அரசுகள் சார்பில் அலங்கார ஊர்திகளின் அணி வகுப்பும் இடம்பெறும்.  நடப்பு ஆண்டு அணிவகுப்பு, ‘இந்தியா சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் நிறைவு’ என்ற கருப்பொருளில் நடக்கவுள்ளது. இதற்காக பல்வேறு மாநிலங்களும் விண்ணப்பங்களை அனுப்பின.

ஏசி ரூமில் உட்கார்ந்து, இஷ்டத்துக்கு முடிவெடுக்கிறார் ஸ்டாலின்... அண்ணாமலை  அதிரடி விமர்சனம்..! | Stalin sits in the AC room and decides at will ...  Annamalai Action Review

தமிழ்நாட்டிலிருந்து விடுதலை போராட்ட வீரர்களான வேலுநாச்சியார், வ.உ.சி., பாரதியார் ஆகியோரின் படங்கள் இடம்பெறும் வகையிலான அலங்கார ஊர்தி அமைக்கப்படும் என மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு சார்பில் முன்மொழிவு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த முன்மொழிவை மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் வல்லுநர் கூழு அனுமதி வழங்கவில்லை. மேற்குறிப்பட்ட தலைவர்கள் பிரபலமற்றவர்கள் என்பதால் தமிழ்நாடு ஊர்தி அனுமதிக்கப்படவில்லை என கூறப்பட்டது. உடனே முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

ஆனாலும் முடிவில் மாற்றமில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியது. மேலும் அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். இருப்பினும் சரியான காரணங்கள் எதுவும் விளக்கப்படவில்லை எனக்கூறி முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதாவது சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட தமிழக ஊர்தி இடம்பெறும் எனவும் மாநிலம் முழுவதும் மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். இதற்கு தமிழக பாஜக கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் ஸ்டாலினுக்கூ எழுதியுள்ள கடிதத்தில், "தமிழக மக்களும் ஊடகங்களும் தாங்கள் தந்த பொங்கல் பரிசு நலக்கேடு தரும் கலப்படம் மிக்கதாக இருப்பதை வெளிச்சப்படுத்தி போராடுகிறார்கள். மிளகில் பப்பாளி விதை, மிளகாய் தூளில் மரத்தூள், நசத்துப்போன வெல்லம். சாறு இல்லாத காய்ந்த கரும்புகள் என கலப்படமும் தரக்கேடும் மக்களின் கோபத்தை அதிகரித்துள்ளது. அதிலிருந்து தப்பிக்க வழக்கமான நடைமுறையான மத்திய அரசுடன் மோதலை உருவாக்கி தாங்கள் மக்கள் கோபத்திலிருந்து தப்பிக்க எடுத்திருக்கும் இந்த முயற்சி பலனளிக்க போவதில்லை.

மகாகவி பாரதியார் தலைசிறந்த தேசியவாதி. தீவிர ஆன்மீகப்பற்று கொண்டவர். அவர் கண்ட கனவு அகண்ட பாரதம். அதுவே பாஜகவின் தாரக மந்திரம். திமுக கொள்கைகளுக்கு எதிரானவர். வ.உ.சியும் தேசப்பற்று மிக்கவர். 1967ஆம் ஆண்டிலிருந்து திமுக ஆட்சி காலத்தில், உள்நோக்கத்துடன் வடிகட்டிய வரலாற்றைதானே எம் மாணவர்களுக்கு வகுப்பறையில் கொடுத்துள்ளீர்கள். உதாரணமாக தமிழ்த்தாய் வாழ்த்தில் உயிரோட்டமான வரிகளை நீக்கினீர்கள். 

இதுபோல உங்கள் காலத்திலிருந்து எடிட் செய்யப்பட்ட வரலாறுகளை தவிர்த்து எங்கள் பள்ளி பாடப்புத்தகங்களில் வார்த்தைகளில் உண்மை வைத்து வரலாறை எழுதவைத்து இந்த மாமனிதர்களின் வாழ்க்கையை பள்ளிச் சிறார்கள் படிக்க தந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்” என எழுதியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் முன்பொருமுறை மேடைப் பேச்சின்போது ஜனவரி 26ஆம் தேதியை வாய் தவறி சுதந்திர தினம் என்று பேசியிருந்தார். அதையும் சுட்டிக்காட்டியுள்ள அண்ணாமலை, "இறுதியாக ஐயா, ஒரு நினைவூட்டல், ஜனவரி 26 நம் நாட்டின் குடியரசு தினமே தவிர நமது சுதந்திர தினம் அல்ல” என நக்கல் செய்துள்ளார்.