தோசை சுட்டார்! அண்ணாமலை மாட்டிக்கிட்டார்

 
d

தமிழ்நாட்டில் இட்லி சுடுவதற்கோ தோசை சுடுவதற்கோ நான் வரவில்லை.  நான் தலைவர் இப்படித்தான் இருப்பேன் என்று அதிரடி காட்டிய அண்ணாமலை கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் தோசை சுட்டு மாட்டிக்கொண்டிருக்கிறார்.

 ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததும் அண்ணாமலை தெரிவித்த சில கருத்துக்கள் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.  அந்த நிலையில் பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் வெளியேறி அதிமுகவில் இணைந்தனர்.  அப்போது  கூட்டணியில் இருக்கும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தார் அண்ணாமலை .

அன்

அண்ணாமலையின் தடாலடி நடவடிக்கையால் தான் நிர்வாகிகள் பாஜகவில் இருந்து வெளியேறுகிறார்கள் என்ற விமர்சனம் எழுந்தபோது,   அண்ணாமலை தமிழ்நாட்டில் தோசை சுடுவதற்கோ, இட்லி சுடுவதற்கோ வரவில்லை.  பாஜவின் மேனேஜராக இருந்து உட்கார்ந்து சீட்டை தேய்ச்சுக்கிட்டு அப்படியே போறதுக்கு வரல.  அண்ணாமலை ஒரு தலைவராக வந்திருக்கிறார்.  நான் ஒரு தலைவர் இப்படித்தான் இருப்பேன்.  பிடித்தால் என் கட்சியில் இருக்கட்டும். பிடிக்காவிட்டால் போகட்டும் என்று தடாலடியாக பேசினார்.

 பொதுவாக தேர்தல் பிரச்சாரத்தின் போது டீக்கடைக்கு சென்று டீ போடுவது, டீ குடிப்பது,  துணி துவைக்கும் இடங்களுக்குச் சென்று பெண்களுக்கு துணி துவைத்து கொடுப்பது, துணி  அலசி கொடுப்பது,  வடை சுடுவது,  புரோட்டா சுடுவது,  பூரி சுடுவது,  இட்லி தோசை சுடுவது என்று வேட்பாளர்களும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்பவரும் வாக்கு சேகரிப்பதற்காக செய்வது வழக்கம்.

 ஈரோடு இடைத்தேர்தலிலும் இதுதான் நடந்தது.  இதை சுட்டிக்காட்டி தான் அண்ணாமலை தமிழ்நாட்டில் நான் தோசை சுடுவதற்கு இட்லி சுடுவதற்கு வரவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.   அதே அண்ணாமலை தற்போது  கர்நாடக  சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருப்பதை அடுத்து பிரச்சாரத்தின் போது ஒரு கடையில் தோசை சுடுகிறார். 

 ஒருவேளை தமிழ்நாட்டில் தான் அண்ணாமலை இட்லி தோசை சுடுவதற்காக வரவில்லையோ? இது கர்நாடகம் என்பதால்தான் அங்கே தோசை சுடுகிறாரா? என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.