கர்நாடகாவிலும் பாஜக உட்கட்சி பூசல்! எடியூரப்பா மகனுக்கு வாய்ப்பளிக்க மறுப்பு
எடியூரப்பா வீட்டு சமையலறையில் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்க முடியாது கர்நாடகா பாஜக சட்டமன்ற உறுப்பினர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பல மூத்த தலைவர்களுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாது என கட்சி மேலிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதை எடியூரப்பாவும் உறுதி செய்திருந்தார். இதனால் பல பாஜக மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைய போகாததாகவும் பரபரப்பு தகவல்கள் பரவி வருகின்றன. எடியூரப்பா கட்சி மேலிட உத்தரவை ஏற்று இம்முறை நான் போட்டியிடப் போவது கிடையாது என்றும் தேர்தல் அரசியல் இருந்து தான் விலகுவதாக அறிவித்த நிலையில், அவர் ஏழு முறை தொடர்ந்து வெற்றி பெற்ற சிக்காரி புறா தொகுதியில் தனது மகன் விஜயேந்திரா போட்டியிட கட்சித் தலைமை ஒப்புக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார். இதுகுறித்து கட்சி தலைமை இதுவரை ஒப்புதல் வழங்காத நிலையில் எடியூரப்பா மற்றும் அவரது மகன் ஆகியோர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து கர்நாடகாவில் பேட்டியளித்த பாஜக தலைவர் சி.டி. ரவி, “கட்சியில் யார் யார் போட்டியிட வேண்டும் என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும், வெறும் தலைவர்களின் மகன் என்ற காரணத்தினால் ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க முடியாது. எடியூரப்பா வீட்டு சமையலறையில் எடுக்கப்படும் முடிவுக்கு கட்சி பொறுப்பல்ல. விஜயேந்திரா போட்டியிட வேண்டுமா கூடாதா என்பது நாடாளுமன்ற அவை குழு தீர்மானம் எடுக்கும்” என்றார்.
ஆளும் பாஜகவுக்கு பக்கபலமாக இருக்கும் லிங்காயத் சமூகத்தினர் எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியதை அடுத்து கடும் அதிருப்தியில் உள்ளனர் தற்பொழுது எடியூரப்பாவை உதாசீனப்படுத்தும் விதமாக சிடி ரவி பேசியுள்ளது மீண்டும் பாஜக ஆதரவு லிங்காயத் வகுப்பினர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.