கோவாவில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் மற்றும் வாக்காளர்கள் இல்லாத கட்சி.. பா.ஜ.க.வின். சி.டி. ரவி கிண்டல்

 
சி.டி.ரவி

கோவாவில் ஆம் ஆத்மி கட்சியை பொறுத்தவரை தலைவர் மற்றும் வாக்காளர்கள் இல்லாத கட்சி என்று பா.ஜ.க.வின். சி.டி. ரவி கிண்டலாக தாக்கினார்.

கோவாவில் அடுத்த சில மாதங்களில் அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கோவா பா.ஜ.க. பொறுப்பாளர் சி.டி.ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது: எதிர்வரும் கோவா சட்டப்பேரவை தேர்தலில் நாங்கள் 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றி பெற முயற்சிப்போம். எங்கள் தொண்டர்கள் அதற்காக பணியாற்றி வருகின்றனர். தொண்டர்களின் நெட்வொர்க் நன்றாக உள்ளது. ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியையும் சேர்த்தால், நூறு சதவீத  வெற்றி இலக்கை எட்ட முடியும். 

ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சிக்கு இங்கு களம் எதுவும் இல்லை. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் போஸ்டர்களில் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் அவர்கள் எதுவும் செய்யவில்லை, ஒரு தலைவர் கூட செய்யவில்லை என்பதுதான் அடிப்படை உண்மை. கோவாவில் ஆம் ஆத்மி கட்சி என்றால் என்ன? இது தலைவர் இல்லாத கட்சி, வாக்காளர்கள் இல்லாத கட்சி அவர்கள் எப்படி வெற்றி பெற முடியும்?. பா.ஜ.க. ஒரு தொண்டர் அடிப்படையிலான கட்சி, எங்களிடம் வாக்காளர்கள் உள்ளனர், நாங்கள் நல்ல வேலையை செய்துள்ளோம், செய்கிறோம், எனவே நாங்கள் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறோம்.

திரிணாமுல் காங்கிரஸ்

எதிர்க்கட்சிக்கு யார் வருவார்கள் என்று தெரியவில்லை, ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும். அதில் நான் நூற்றுக்கு நூறு சதவீதம் உறுதியாக உள்ளேன். திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்க மாதிரியில் கோவா வந்துள்ளது. மேற்கு வங்க மாதிரியை கோவா மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இவர்களின் அராஜக மாதிரி ஒரு ஊழல் மாதிரி. ஒரு பண்பட்ட குடிமகன் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.