11 ஆண்டுகளுக்கு பின் தனித்து போட்டியிடும் பாஜக

 
bjp

 கூட்டணி தர்மத்தை தொடர்ந்து மீறி வந்ததால்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது பாஜகவிற்கு.   2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இருந்து அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த பாஜக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வரைக்கும் அதிமுகவுடன் கூட்டணியிலிருந்து தேர்தலை சந்தித்து வந்தது.   தற்போது நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

 அதிமுகவின் கூட்டணியிலிருந்து 4 எம்எல்ஏக்கள் பெற்ற பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிக இடங்களை பெறும் வாய்ப்பை இழந்தோம் என்று சொல்லி அதிமுகவிற்கு கோபத்தை ஏற்படுத்தி வந்தனர் பாஜகவினர்.   கூட்டணியில் இருக்கும் போது ஒரு கட்சியில் இருப்போர் இன்னொரு கட்சியில் இணைவதை ஏற்பது கூட்டணி தர்மம் அல்ல.   ஆனாலும் கூட்டணி தர்மத்தை மீறி அதிமுகவினரை பாஜகவில் இணைத்து வந்தனர்.  தற்போதும் அது தொடர்கிறது.

a

 இதற்கெல்லாம் உச்சமாக பாஜகதான் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது.   எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக அந்த வேலையை செய்யவில்லை.  அதிமுக எம்எல்ஏக்களுக்கு ஆண்மை இல்லை முதுகெலும்பு இல்லை என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேச,   கட்சி தலைமையின் ஒப்புதல் இல்லாமல் அவர் இவ்வாறு பேசியிருக்க வாய்ப்பில்லை என்று முடிவெடுத்த அதிமுக தலைமை,  அறிக்கை மூலமாகவோ பேட்டிகள் மூலமாகவோ தங்கள் கோபத்தைக் காட்டாமல் கூட்டணி பேச்சுவார்த்தையில் காட்டிவிட்டனர். 

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 30 சதவிகித இடங்களை எதிர்பார்த்த பாஜகவுக்கு 10 சதவிகித இடங்களை மட்டுமே தர முடியும் என்று உறுதியாக இருந்திருக்கிறது அதிமுக தலைமை.   நான்கு மணி நேரம் போராடி பார்த்தும் பிரயோசனமில்லை.   வெளியே வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி தலைமை இடம் சொல்லிவிட்டு தனித்துப் போட்டியிடுவது என்று அறிவித்துவிட்டார்.   அவர் இந்த முடிவை எடுக்கும்படி தள்ளப்பட்டார் என்றுதான் பேசிக்கொள்கிறார்கள்.  அதற்கு காரணம்,  கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இருந்து வந்த நிலையிலேயே,  அதிமுக தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து பாஜகவிற்கு அதிர்ச்சி கொடுத்தது.   நம்மை கழட்டி விடுகிரார்கள் என்பதை புரிந்து கொண்டுதான் டெல்லி இடம் எடுத்துச்சொல்லி தனித்துப் போட்டியிடும் முடிவை அறிவித்து இருக்கிறார் அண்ணாமலை.   அவர் தனித்து போட்டியிடுகிறோம் என்று அறிவித்த அடுத்த அடுத்த நிமிடமே அதிமுக தனது இரண்டாவது வேட்பாளர் பட்டியலை அறிவித்து பாஜகவிற்கு மேலும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது.

bjj

இதுகுறித்து அண்ணாமலை,   கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் இல்லந்தோறும் தாமரையே எடுத்துச் செல்லவும் இந்த தனித்துப் போட்டியிடும் முடிவு ஒரு வாய்ப்பாக அமையும்.   இந்த முடிவை டெல்லி மேலிடத் தலைவர்களிடம் சொன்னபோது எங்களுக்கு முழு சுதந்திரம் அளித்தார்கள்.   அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றால் உள்ளாட்சியில் அதிக இடங்களில் பாஜக போட்டியிட வேண்டும் .  அதற்காக அதிமுக தலைவர்கள் மீது வருத்தம் எதுவும் கிடையாது.  அவர்கள் மீது சிறு வருத்தம் கூட கிடையாது.   11 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக தனித்து போட்டியிடுகிறது.   இதுவரைக்கும் பாஜக சென்றடையாத இடங்களிலெல்லாம் வெற்றிபெறும் என்று தெரிவித்திருக்கிறார்.