மன்னிப்பு கேட்க முடியாது போடா - டிசர்ட் மூலம் பாஜக பதிலடி
இந்தி திணிப்பு விவகாரத்தில் இந்தி தெரியாது போடா என்று டி சர்ட் மூலம் பாஜகவுக்கு திமுக பதிலடி கொடுத்திருந்தது. தற்போது திமுக பைல்ஸ் விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது போடா என்று டி சர்ட் மூலம் திமுகவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறது பாஜக.
திமுக பைல்ஸ் என்கிற பெயரில் திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டிருந்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. திமுகவினரின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளையும் முன் வைத்திருந்தார். ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகளை அண்ணாமலை சொல்கிறார் என்று திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , திமுக எம்பி டி. ஆர். பாலு உள்ளிட்டோர் தனித்தனியாக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். 500 கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்றும் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
இதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை, குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. அதனால் மன்னிப்பு கேட்க முடியாது. 500 கோடி ரூபாய் அபராதமும் செலுத்த முடியாது என்று கூறியிருந்தார்.
இப்படி சொன்னதற்கு பின்னர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரும் தமிழக பாஜக நிர்வாகியுமான அமர்பிரசாத் ரெட்டி, மன்னிப்பு கேட்க முடியாது போடா என்று தனது வலைத்தள பக்கத்தில் ஒரு படத்தை பதிவிட்டிருந்தார். இதை அடுத்து பாஜகவினர் மன்னிப்பு கேட்க முடியாது போடா என்று டீசர்ட் அணிந்து திமுகவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். மன்னிப்பு கேட்க முடியாது போடா என்ற வாசகம் அடங்கிய டீசர்ட் அணிந்து புகைப்படத்தை வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர் .மன்னிப்பு கேட்க முடியாது போடா என்ற வாசகம் அடங்கிய டீசர்ட்டையும் வலைதளங்களில் பாஜகவினர் பரப்பி வருகின்றனர்.
இயக்குநர் வெற்றிமாறன் கடந்த 2020 ஆம் ஆண்டில் டெல்லி சென்றிருந்தபோது இந்தி தெரியாததால் விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டதாக ஆவேசப்பட்டிருந்தார் . இதன் பின்னர் பலரும் இந்தி தெரியாது போடா என்று டீசர்ட் அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள். இதன் பின்னணியில் திமுக இருந்தது என்ற விமர்சனம் எழுந்தது .
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்ற அலுவலக மொழி கமிட்டியின் 37வது கூட்டம் நடந்தபோது, இந்தக் கூட்டத்திற்கு தலைமை வைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழியை உள்ளூர் மொழிக்கு மாற்றாக அல்லாமல் ஆங்கில மொழிக்கு மாற்றாக பயன்படுத்தலாம் என்று கூறியிருந்தார். இதற்கு உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர், இந்தி தெரியாது போடா என்று டீசர்ட் அணிந்தும், தமிழ்த்தாயின் ஓவியத்தை வலைத்தளங்களில் வெளியிட்டும் பரபரப்பு ஏற்படுத்தினர். அதேபோல் இப்போது பாஜகவினர் டீசர்ட் வழியாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.