25 சீட்டுக்கு கீழ் தந்தால் தனித்துப்போட்டி- பாஜக கறார்
தமிழகத்தில் 25 சீட்டுக்கு கீழ் தந்தால் தனித்து போட்டியிடும் என அதிமுகவை பாஜக மிரட்டுவது கூட்டணியில் மீண்டும் விரிசலை கிளப்பியுள்ளது.
டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அண்ணாமலையும் பங்கேற்று இருந்தார். எடப்பாடி பழனிச்சாமி உடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ். பி. வேலுமணி, தங்கமணி, சி.வி. சண்முகம் மற்றும் கேபி முனுசாமி உள்ளிட்டோர் சென்றிருந்தனர். இந்த சந்திப்பில் அண்ணாமலையுடனான எடப்பாடி பழனிசாமியின் மோதலுக்கு அமித்ஷா முற்றுப்புள்ளி வைத்தார். இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அதிமுக -பாஜக கூட்டணி தொடர வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார் . அதன்படியே அண்ணாமலையும் எடப்பாடி பழனிச்சாமியும் சமாதானமாகி அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என்று அறிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில், “பாஜக வாங்கும் இடத்தில் இல்லை அதிமுகவும் கொடுக்கும் இடத்தில் இல்லை மத்தியில் ஆளப்போவது மோடி. அதன் பிரதிநிதிகள் தமிழகத்தில் இருந்தாலே தமிழ்நாட்டுக்கு நல்லது. கூட்டணி என்று ஏற்படுமானால் 25 சீட்டுக்கு குறைவில்லாமல் தந்தாலே இல்லை எனில் தனியாகவே!” எனக் குறிப்பிட்டுள்ளார். மத்தியில் 400 இடங்களில் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சி அமைப்போம் என்றும் எஸ்.ஆர் சேகர் தெரிவித்துள்ளார்.