"திமுக செஞ்சா தப்பில்ல.. நாங்க செஞ்சா தப்பா".. கொதித்த காங்., - குளுகுளு அறையில் சூடான மீட்டிங்!
உள்ளாட்சி அமைப்புகளின் மிக முக்கியமான தேர்தல் இனி தான் வரப்போகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போதுமே தீயாக இருக்கும். எம்எல்ஏ எலெக்சன் கூட இவ்ளோ பெரிய எதிர்பார்ப்பு நிலவாது. தேர்தல் ஆணையம் பிப்ரவரி மத்தியில் தேர்தல் நடத்த தேர்தல் பணிகளைத் துரிதப்படுத்தி வருவதாக தகவல்கள் வட்டமடிக்கின்றன. அதன் வெள்ளோட்டமாக இன்று அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறது. இதனால் கடந்த மூன்று மாதங்களாக திமுக, அதிமுக, பாமக என ஒவ்வொரு கட்சிகளும் மாநகர, நகர, பேரூராட்சி அளவில் கூட்டங்கள் நடத்தி வருகின்றன.
கூட்டணிக் கட்சி பிரதிநிதிகளும் கலந்தாலோசிக்கின்றனர். உயர் மட்ட தலைவர்களுடனான கூட்டணிப் பங்கீடுக்கு முன்பாகவே அடிமட்ட அளவில் கூட்டணிக்குள் நிலவும் பிரச்சினைகளைக் களைய கூட்டம் நடத்தப்ப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் திமுக கூட்டணிக் கட்சியினரின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சி.வி.மெய்யநாதன் மற்றும் திமுக தோழமைக் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். குளுகுளு அறையில் விவாதங்களில் அனல் பறந்திருக்கிறது. திமுக காங்கிரஸ் மீதும் குற்றம் சொல்வதும் அவர்கள் இவர்கள் மீதும் என தீப்பொறி பறந்துள்ளது.
அப்போது கூட்டணி கட்சியினர், "கேட்கும் இடங்களை விட எண்ணிக்கை குறைந்தாலும் பரவாயில்லை. அப்படி ஒதுக்கும் இடங்களில் எங்களுக்கு எதிராக திமுகவிலிருந்து சுயேச்சையாக நிற்கிறார்கள். இதனை கட்சி தலைமை கண்டுகொள்வதே இல்லை. அவர்களை சுயேச்சையாக நிற்கவிடாமல் எங்களுக்கு ஆதரவு கொடுக்குமாறு கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும்’’ என்றனர். அதன்பின் அமைச்சர்கள் பேசும்போது, ‘‘கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவைச் சேர்ந்தவர்கள் யாராவது சுயேச்சையாக நின்றால், அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள். நீங்கள் அச்சப்பட வேண்டாம்’’ என உறுதியளித்தனர்.
\
தொடர்ந்து அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியபோது, "கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தேர்தலில் பெரும்பான்மை இருந்தும் காங்கிரஸ் கட்சியினர் மாற்றி அதிமுகவுக்கு வாக்களித்ததால் பெரிய சங்கடத்துக்கு ஆளானேன். அதேபோல, இந்தத் தேர்தலில் கூட்டணி கட்சியினர் என்னை மீண்டும் தர்ம சங்கடத்துக்கு ஆளாக்கி விடாதீர்கள்’’ என்றார். அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் கட்சியினர், ‘‘நாங்கள் மட்டுமல்ல, திமுகவில் இருந்தும் ஒருவர் அதிமுகவுக்கு வாக்களித்தார். அதை மட்டும் திமுக பெரிதுபடுத்துவதில்லை’’ என்றனர். இதனால், காங்கிரஸ் மற்றும் திமுகவினர்களுக்கு இடையே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் அமைச்சர்கள் சமதானப்படுத்தினர்.